நத்தார் பண்டிகை ஆராதனைகளில் பங்கேற்க 50 பேருக்கு அனுமதி!



நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்துகொள்ளலாம் என கொரோனா தடுப்பு செயலணியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க.கருணாகரன் தெரிவித்தார்.

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் எடுக்கப்பட் தீர்மானம் தொடர்பாக தெரிவித்த அவர், “தேவாலயங்களில் நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளின்போது கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கிறிஸ்தவ பாதிரிமார்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

எனவே இந்த வேண்டுகோளின் அடிப்படையில் தேவாலயங்களுக்கு நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்துகொள்ளலாம்.

அங்கு வருகின்றவர்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றல் வேண்டும். அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேட குழுவினருடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

பண்டிகை காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ள மக்கள் கடைசிவரை காத்திருக்காது நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுவது அவசியமாகும்.

கடை உரிமையாளர்கள் கவனமாக வாடிக்கையாளர்களை சுகாதார நடைமுறைகளுடன் நடத்துவது அவசியமானதாக கருதப்படுகின்றது.

நத்தார் பண்டிகையைத் தொடர்ந்து புத்தாண்டு அதன்பின்னர் பொங்கல் பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகை காலமாகையினால் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புடன் செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.