யாழ். மாவட்டத்தில் தரமுயர்த்தப்படும் 8 பாடசாலைகள்!


2021 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் 08 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட உள்ளது.

இத்தகவலை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களின் தொகையை அரசு அதிகரித்துள்ளது. 10 நகர பல்கலைக்கழகங்களையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்னொன்று நுவரெலியா மாவட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன.

முன்பள்ளிக்கல்வி தொடர்பில் எந்த அரசும் இதுவரை கவனம் செலுத்தவில்லை. எமது அரசு முன்பள்ளிக்கல்வியை அரச கட்டமைப்புக்குள் உள்ளீர்த்து நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளது.

அத்துடன் முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரச நியமனங்களைவழங்குவதுடன் நிரந்தர சம்பளத்தையும் வழங்க வேண்டும். 1,000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் யாழ் மாவட்டத்தில் 8 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் அதேவேளை யாழ் தீவகப்பகுதி மற்றும் கிளிநொச்சியிலுள்ள கஷ்டப் பிரதேசங்களையும் கல்வி அமைச்சு கவனத்தில் செலுத்த வேண்டும். .

இலங்கை பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலில் யாழ் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளது. அத்துடன் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி, சித்த மருத்துவ பிரிவு ஆகியவற்றை பீடங்களாக்க வேண்டும். அதேபோன்று உடற்கல்வி பட்டப்படிப்பையும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.