வாழைச்சேனை மக்களை காக்க முன்னாயத்தம்!


 மட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வாழைச்சேனை பிரதேச சபையில் இன்று (02) விசேட கூட்டம் நடைபெற்றது.

இதன்போது வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், கிரான் பிரதேச செயலகம் ஆகியவற்றிலுள்ள மக்களை சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதியோரங்களில் காணப்படும் பாரிய மரங்கள் மூலம் ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் காணப்படும் பட்சத்தில் மரங்களில் கிளைகளை அகற்றும் நடவடிக்கையினை சபையின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளுமாறு தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்தினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும் சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் சபை உத்தியோகத்தர்கள், சனசமூக அமைப்புக்கள் என்பவற்றுடன் இணைந்து மக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

கரையோர பிரதேசங்களில் காணப்படும் மக்களை தங்களது இருப்பிடங்களில் இருந்து வேறொரு இடங்களுக்கு செல்லும் வகையில் அறிவித்தல்களை வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.