முதலிடம் பிடித்த யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்!

 



தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியை 66 ஓட்டங்களினால் தோற்கடித்து யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று பிற்பகல் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணியானது ஆரம்பத்தில் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியபோதும் திசர பெரேரா (97), சோயிப் மாலிக் (23), தனஞ்சய டிசில்வா (29) மற்றும் வர்னிந்து ஹசரங்க (24)ஆகியோரின் நிலையான துடுப்பாட்டத்தினால் விஸ்வரூபாம் எடுத்தது.

குறிப்பாக அணித் தலைவர் திசர பெரேரா இன்னிங்ஸில் மொத்தமாக 44 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களை பெற்றார்.

இதனால் யாழ்ப்பாணம் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை குவித்தது.

219 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 66 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

அணி சார்பில் சமித் படேல் 41 ஓட்டங்களையும், தசூன் சானக்க 35 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ்ப்பாணம் அணி சார்பில் உஷ்மன் சின்வாரி 3 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாண்டோ மற்றும் திசர பெரோரா  தலா 2 விக்கெட்டுகளையும், டுவான் ஆலிவர் மற்றும் வர்னிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணித் தலைவர் திசர பெரேரா தேர்வானார்.

இந்த வெற்றியின் மூலம் யாழ்ப்பாணம் அணியானது 4 புள்ளிகளுடன் அட்டவணைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை நேற்றிரவு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணி 25 ஓட்டங்களினால் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 196 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் பிரண்டன் டெய்லர் 51 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 49 ஒட்டங்களையும், கமிந்து மெண்டீஸ் 28 ஓட்டங்களையும் மற்றும் குசல் பெரேரா 27 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

197 வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஷாஹித் அப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 25 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

அணி சார்பில் தனுஷ்க குணதிலக்க 53 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.

இந்த தோல்வியின் மூலம் காலி அணியானது தான் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, புள்ளி பட்டியலில் இறுதி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

எல்.பி.எல். தொடரில் இன்று இரு ஆட்டங்கள் இடம்பெறவுள்ளது. அதன்படி பிற்பகல் 3.30 க்கும் ஆரம்பமாகும் தொடரின் 7 ஆவது போட்டியானது கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகளுக்கிடையிலும், இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும் தொடரின் 8 ஆவது போட்டி யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.