சடலம் மாறியதால் குழப்பம்!


 கிளிநொச்சியில் சடலம் ஒன்று மாறி கையளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (06) கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டு மரணங்கள் இடம்பெற்றது. திருவையாறு பகுதியினைச் சேர்ந்த (55-வயது) கோவிந்தன் மோகனதாஸ். கனகாம்பிகை குளத்தைச் சேர்ந்த கந்தையா செல்வராசா (வயது-61) ஆகிய இருவரும் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

இருவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்த வைத்தியசாலை அதன் மாதிரிகளை பெற்று பரிசோதனைக்காக அனுப்பியிருந்தது. இதில் மோகனதாஸ் என்பவரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என முன்னதாகவே கிடைத்தது. மற்றையவரான செல்வராசாவின் பிசிஆர் பரிசோதனைக்கு மாதிரிகள் இன்று காலையே அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் மோகனதாஸுக்கு போஸ்மோட்டம் செய்வதற்கு பதிலாக செல்வராசாவுக்கு செய்யப்பட்டு அவரது உடல் இன்று (07) பிற்பகல் சுமார் பிற்பகல் 2.30 மணியளவில் திருவையாறில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வீட்டில் சவப்பெட்டி திறந்து வைக்கப்பட்ட நிலையில் மனைவி உட்பட அனைவரும் சோகத்தில் கதறி அழுதுகொண்டிருக்க, இறந்த மோகனதாஸின் 15 வயது மகள் இது தந்தையின் உடல் இல்லை என கதறிய போதே உடல் மாறி அனுப்பப்பட்ட விடயம் தெரியவந்தது. பின்னர் மீண்டும் திருவையாற்றிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.