மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு!


 பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த பாகிஸ்தானைச் சோ்ந்த மனித உரிமை ஆர்வலர் கனடாவில் காணாமல் போயிருந்த நிலையில் டொரன்டோ நகரில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கனடாவில் புகலிடம் கோரி கடந்த 5 வருடங்களாக வாழ்த்துவந்த 37 வயதுடைய கரீமா பலூச் என்ற மனித உரிமை ஆர்வலரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் மாநிலமான பலூசிஸ்தானில் மனித உரிமை ஆர்வலராக பணியாற்றிய அவா் கனடாவுக்கு வந்த பின்னரும் இனந்தெரியாதவா்களால் பின்தொடரப்பட்டார். அத்துடன், பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் என நம்பப்படுவோரால் அவா் அச்சுறுத்தப்படுவதாக முறையிடப்பட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தடை செய்யப்பட்ட பலூசிஸ்தான் மாணவர் அரசியல் அமைப்பான பலூச் அமைப்பின் (BSO-Azad ) முதல் தலைவராக இருந்த கரீமா, பலூசிஸ்தானில் உரிமை கோரிப் போராடும் கிளர்ச்சி இயக்கத்தினருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பான தகவல்களைக் கோரி அவா் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து வந்தார். மனித உரிமைகளை மேம்படுத்த அவர் செய்த பணிக்காக பி.பி.சியின் 2016 ஆம் ஆண்டின் மிகவும் உத்வேகம் தரும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக அவா் பட்டியலிடப்பட்டார்.

பலூசிஸ்தானில் இருந்து தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களில் மர்மமாக இறந்துபோன இரண்டாவது பாகிஸ்தானிய அரசின் அதிருப்தியாளராக கரீமா உள்ளார். பலூசிஸ்தானின் மனித உரிமை மீறல்கள் குறித்து எழுதி வந்த பத்திரிகையாளர் சஜித் உசேன் பாகிஸ்தானில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அங்கிருந்த வெளியேறி சுவிடனில் தஞ்சம் கோரியிருந்த நிலையில் கடந்த மே மாதம் மர்மான முறையி்ல் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த மற்றொரு செயற்பாட்டாளர் ரொரண்டோவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபயிற்சிக்காக வெளியே சென்ற கரீமா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என அவரது கணவா் ரொரண்டோ பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அவரை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

இது நிச்சயம் தற்கொலையாக இருக்காது. கரீமா ஒரு திடமான பெண். அவர் நல்ல மனநிலையில் வீட்டை விட்டு வெளியேறினார் என அவரது கணவா் கூறினார். அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்களை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது எனவும் அவா் தெரிவித்தார்.

யாரோ ஒருவர் அவருக்கு கிறிஸ்மஸ் பரிசு அனுப்பி, அவருக்கு ஒரு பாடம் கற்பிப்பார்கள் என்று பெயர் தெரியாத ஒரு நபரிடம் இருந்து கரீமாவுக்கு சமீபத்தில் மிரட்டல் வந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை கரீமா மரணத்துக்கு 40 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று பலுசிஸ்தான் தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.