சரத் வீரசேகரவின் கருத்திற்கு சரத் எதிர்ப்பு!


 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்வதானது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்குச் சமமானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். மேலும்,

“நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்கள் முதலில் ஒழுக்க நெறியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கம் இல்லாதவர்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளதால், நாடும் ஒழுக்கமற்றதாக மாறக்கூடும்.

இராணுவம் பாரிய பின்னடைவைச் சந்தித்த 2009 ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்தபோதும், நானே அதற்கு இணங்கவில்லை. சரத் வீரசேகர போன்றவர்கள் முதலில் வரலாறுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

போர் வெற்றி இராணுவத்தை மாத்திரமே சாரும். அதில் அரசியல்வாதிகள் எவரும் உரிமை கொண்டாட முடியாது. அமைச்சர் சரத் வீரசேகர, வெறுமனே தெற்கு சிங்கள மக்களுக்கான அமைச்சர் மாத்திரமல்ல, வடக்கு – கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களினதும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஓர் இனத்தின் உரிமைகள் சார்ந்து பேசுபவர்களை அரசியல் ரீதியில் தடைசெய்ய வேண்டும் என்று கூறுமளவுக்கு சரத் வீரசேகர முட்டாளா?” என்று கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.