நாட்டின் பொருளாதாரம் விளையாட்டு துறையின் ஊடாக கட்டியெழுப்பப்படும்- பசில்!!

 


விளையாட்டு துறையை மேம்படுத்தி அதனூடாக பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அதிகாரிகளுடன் நேற்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இதன்போது, பசில் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தி விளையாட்டு பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கு சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தினூடாக எதிர்பார்க்கின்றோம்.


அதனூடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்ப்பார்க்கின்றோம்.


இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறைக்கென 8264 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட வரலாற்றில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறைக்கென அதிக தொகை ஒதுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் லங்கா பிரிமீயர் லீக் போட்டியை நடத்துகின்றமை பொருளாதாரத்திற்கு பெரும் பலமாகும்.


கிராம மட்டத்தில் விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் போது, இளைஞர் விவகார மற்றும விளையாட்டுத்துறை சார்ந்த அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு அவசியம்.


கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் விளையாட்டு மைதானங்களை தயாரிக்கும்போது கிராம சேவகர் பிரிவிற்கு விளையாட்டு கழகமொன்றை ஆரம்பித்து அந்த விளையாட்டு கழகத்தின் தலையீட்டுடன் விளையாட்டு மைதானத்திற்கு உகந்த இடத்தை தெரிவுசெய்ய வேண்டும்.


பாடசாலை மட்டத்தில் விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும்போது மாகாண கல்வி அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்


அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறையில் வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.


அத்துன், கிராம மட்டத்தில் புரமைக்கப்படும் விளையாட்டு மைதானங்களில் கிராம சேவகர் பிரிவு மட்டத்திலும் பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலும் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.


விளையாட்டு திறன் கொண்ட கிராம இளைஞர் யுவதிகளை தேசிய மட்டத்திலிருந்து சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வது இந்த வேலைத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும் எனவும் அமைச்சர் கூறினார்.


குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, அமைச்சின் செயலாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.