சீர்கேட்டினால் அநியாயமாக பறிபோனதா நோயாளியின் உயிர்?


 பல்வேறு சீர்கேடுகளுடன் இயங்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் மின் தடைகாரணமாக இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

சாவகச்சேரி வைத்தியசாலையில் பல்வேறு சீர்கேடுகளுக்கு மத்தியிலேயே மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியான குற்றசாட்டுகள் ஊழியர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டு வருவதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டால் தானியக்க முறையில் செயற்படும் மின் பிறப்பாக்கி இருந்தும் அது செயலற்று காணப்பட்டுள்ளது.

நேற்று (ஜன-09) இரவு எட்டு மணிக்குப் பின் மூன்று தடவைகள், இடையிடையே மின் தடை ஏற்ப்பட்டது. இதில் சுமார் 10 நிமிடங்கள் வரை மின் தடையேற்ப்பட்டது.

பிரதான மின் தடைப்படுமிடத்து, தானியங்கி மின் பிறப்பாக்கி மூலம் மின் வழங்கப்படுவது வழமை, ஆனால் நேற்றைய தினம் பிரதான மின் வழங்கலில் தடைப்பட்டதும், தானியங்கி மின் பிறப்பாக்கி இயங்கவில்லை. இதனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இருளில் மூழ்கியது.

இதனால் வைத்தியசாலை நோயாளர் விடுதிகளில் இருந்துள்ள நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறு மின் தடை ஏற்பட்ட குறித்த நேரத்தில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருதய நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், மின்தடையினால் ஏற்பட்ட இடையூறு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகவம் மருத்துவமனை உள்ளகத் தகவல்கள் உறுதி செய்துள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க கதிர்காமு வைரவநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.