கொல்லும் தனிமையில் தன்னை!!


 யாருமற்ற தனிமையில்

மௌனத்தில் புரட்டிய
வார்த்தைகளை கைநிறைய
வைத்து கொண்டு விளையாடும்
பிறழ் மனசுக்காரியாய் அவள்..
பிரபஞ்சத்தின் பேரமைதியை
கொறித்து விழுங்குகையில்
விக்கித் தெறித்த வார்த்தைகள்
குமுறித் தீர்க்கும் மௌனக் கடல்
அவளைச்சுற்றி..
ஒலிக்காத வெண்சங்கினுள்
மௌனக் கடலின் பேரொலியாய்
ஔிந்தே கிடக்கிக்கிறது
மௌனத்தின் பேரிரைச்சல்கள்
மனக்கடலில்..
பொழியாதும் கலையாதும்
புரண்டலையும் முகிலின் கனமாய்
விழியுடைத்து வழியும்
புரிதல் வாய்க்கப் பெறாத
பெரும் சோகம்
கன்னங்களில் காய்ந்து
உப்புக் கரிக்கிறது...
அவள் உள்ளங்கைச் சூட்டுக்குள்
கதகதக்கும் பயனற்ற பெருநேசத்தின்
வெறுமை அணுவணுவாய்
கொல்லும் தனிமையில் தன்னை
இழந்து கொண்டிருக்கிறாள்..
கவிஞர்களே..
தனிமை கொஞ்சம் தேவை என்றால்
அவளிடம் கொஞ்சம் கடன் வாங்கிக்
கொள்ளுங்கள்..

சங்கரி சிவகணேசன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.