வல்லினம் 3 - கோபிகை!!

 


கட்டிலில் படுத்துக்கொண்டே, "உன்னைத்தான் நினைச்சன், அதுக்குள்ள கொண்டுவந்திட்டாய், தாம்மா" என்றவரிடம்,  அன்பாக புன்னகைத்தபடியே தேநீரை நீட்டினாள். 

"தம்பிக்கு குடுத்திட்டியே?" கேட்டவரிடம், 

"இல்லையம்மா, உங்களுக்கு தந்திட்டு குடுக்கப்போறன்," என்றபடியே தேநீரோடு நகர்ந்தாள். 

இருபத்தைந்து வயதைத் தொட்டுவிட்ட, சீராளன், அந்த வீட்டின் கடைக்குட்டி என்றாலும் இன்றைய நாளில் அந்தக் குடும்பத்தைத் தாங்குகின்ற தாங்குதூண் அவன்தான். தன்னுடைய குடும்பத்தோடு சேர்த்து அவளையும் சுமக்கிறான்.  வேறு வழியின்றி அவளும் அந்த வீட்டில் அடைக்கலமாகிவிட்டாள். 

கொட்டகைக்கு சற்று தள்ளி நின்று, சீராளன்....சீராளன்......என்று குரல் கொடுத்தாள். 

"ஓமோம் ......"

அவசரமாய் எழுந்து அமர்ந்தவன், பெரிய கொட்டாவி ஒன்றை வெளிப்படுத்திக்கொண்டே, கையை நீட்டினான். 

தேநீரைக் கொடுத்துவிட்டு, "குடியுங்கோ"  என்றபடி சற்று தள்ளி நின்றவள், அப்படியே நிற்கவும், தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பதைப் புரிந்துகொண்ட சீராளன் நிமிர்ந்து ஆரபியைப் பார்த்தான். 

"அம்மாவுக்கு நெஸ்ரமோல்ற் முடிஞ்சிது" 

"சரி சரி நான் வாங்கிவாறன்"

தலையைஆட்டியபடி மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள். இசையரசி அக்கா எழுந்துவிட்ட சுவடு தெரிந்தது. இருவருக்குமாக தேநீரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நடந்தாள். 



"ஏய் ......பரிதி ....வாய்க்கால் உடைஞ்சிடும், மாமா அடிப்பான், கவனமா தண்ணியைக் கொண்டுபோய் ஊத்து" தூரத்தில் நடந்த மகளைக் கண்டித்த தாயைப் பார்த்து உதட்டைச் சுழித்த பரிதியைக் கனிவோடு பார்த்தபடி நடந்து வந்தாள் ஆரபி. 

பத்துவயதின் துறுதுறுப்பில் ஓடிக்கொண்டிருந்தாள் குழந்தை. அப்பாவின் வாசம் அறியாத குழந்தை அவள். இப்படி ஒரு குழந்தை உருவாகியிருப்பதே தெரியாமல் வீரமரணத்தை அடைந்துவிட்ட கேணல் நிலவனின் கடைசி வாரிசு அவள்தான். கொடிய யுத்தத்திற்குள் அவள் கருத்தரித்தாள். போர்க்களங்களோடு தன் நேரங்களையெல்லாம் புடமிட்டுக்கொண்டிருந்த அவள் தந்தைக்கு அவள் ஜனித்துவிட்ட விடயமே தெரியாது......

பெருமூச்சொன்றை வெளிவிட்டவள்,  வளர்ந்து செழித்து நின்ற மிளகாய்ச் செடிகளை ஆவலோடு பார்த்தபடி வாய்க்கால் கரையோரமாக மெல்ல தடம் பதித்து நடந்தாள்.

தோட்டத்தின் முன் காணியில் நின்ற பெரிய மாமரத்தடியில் கொண்டுவந்த சாப்பாட்டை எடுத்து வைத்தவள், "அக்கா......." என்றாள் உரத்த குரலில்.  

மிளகாய் செடிகளுக்குள் களையெடுத்துக்கொண்டிருந்த இசையரசி நிமிர்ந்து பார்க்கவும் கைகளை உயரத்தூக்கி ஆட்டிக் காட்டினாள். 

சற்றுத் தள்ளிநின்ற தம்பியிடம், "தம்பி, ஆரபி சாப்பாடு கொண்டுவந்திட்டா, வா சாப்பிட்டு வந்திடுவம்" என்றதும் 

தமக்கையை சற்றே முறைத்தவன், "அவவை என்னத்துக்கு அக்கா சாப்பாடெல்லாம் கொண்டுவரச் சொல்லுறீங்கள், பிள்ளையள் யாராவது கொண்டுவந்திருக்கலாம் தானே," என்றான். 


நான் எங்கையடா சொன்னன், அவள்தான் அடம்பிடிச்சு நான் கொண்டுவாறன், போங்கோ" என்றவள், தம்பியிடம் சமாதானம் சொன்னாலும் இசையரசிக்கும் ஒருமாதிரித்தான் இருந்தது. 

"வீட்டுக்கு வந்த பிள்ளையை வேலை வாங்கிறது சரியில்லை எண்டு நான் சொன்னன், அவள்தான் அப்ப நீங்கள் என்னை வேற்றுஆளாய்த்தான் பாக்கிறீங்கள் எண்டு சண்டை போடுறாள், நான் என்ன செய்யிறது" என்றதும் 

சின்னப் புன்னகையுடன் "சரி சரி வாங்கோ" என்றான் சீராளன் சமாதானமாக. 

அக்காவும் தம்பியுமாக மிளகாய்ச் செடிகளின் ஓரமாக மெல்ல நடக்கத் தொடங்கினர். 


தொடரும்....


கோபிகை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.