முழுமையாக முடங்கியது வடக்கு- கிழக்கு!!

 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு- கிழக்கில்  பூரண ஹர்த்தால் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.

அனைத்து தமிழ் கட்சிகள், மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் குறித்த கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு- கிழக்கு மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

அதற்கமைய கதவடைப்பு போராட்டத்தினை முன்னிட்டு இன்றைய தினம், யாழ்.நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு, வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.

மேலும், தனியார் போக்குவரத்து சேவை இடம்பெறவில்லை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. இதனால் பாடசாலையின் கல்வி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று  கிளிநொச்சியிலும் ஹர்த்தால் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பகுதியில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாட்டம் இல்லாமையால் நகர் வெறிச்சோடி காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று மட்டக்களப்பிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்காக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனால் அதிகளவான பகுதிகளில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8ஆம் திகதி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம், தற்போதைய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் மாணவர்கள், தீர்வு கிடைக்கும் வகையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று அதிகாலை வரை முன்னெடுத்திருந்திருந்தனர். இதன்போது துணைவேந்தர் நேரில் சென்று அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல்லையும் மாணவர்களுடன் இணைந்து துணைவேந்தர் இன்று காலை நாட்டியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் இத்தகையதொரு சம்பவம் நடைபெற கூடாது என்பதை வலியுறுத்தி வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.