பிள்ளையான் நீதிமன்ற தீர்ப்பினை மதிக்கவேண்டும்!


பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம நேற்று உத்தரவிட்டிருந்தது.

நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிவான் இந்த உத்தரவினை வழங்கி இருந்தது.

குறித்த வீடு மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் அருண் தம்பிமுத்துவிற்கு சொந்தமானதாகும்.

இந்நிலையில் தமது குடும்ப சொத்தாக பரம்பரைபரம்பரையாக தாங்கள் வசித்துவந்த வீட்டிற்குள் கடந்த 30 வருடமாக தாங்கள் செல்லமுடியாத நிலையிருந்துவருவதாக

நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அருண்தம்பிமுத்து,

பிள்ளையான் அவர்கள் சட்ட விரோதமாக என்னுடைய பாரம்பரிய வீட்டினை அபகரித்திருந்தார். மட்டக்களப்பு நீதிமன்றில் அதற்கு எதிரான வழக்கினை நான் தொடுத்திருந்தேன். இன்று எனக்கு நீதி கிடைத்திருக்கின்றது.

நீதிமன்றில் தாங்கள் மூன்று கோடிக்கு மேல் செலவழித்திருந்ததாகவும் அதனைப் பெற்றுத்தருமாறு கோரிக்கையினை முன்வைத்திருந்தனர், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்னுமொருவருடைய காணிக்குள் பலாத்காரமாக சென்று இருந்துவிட்டு அதற்குள் நாங்கள் மூன்று கோடி செலவிட்டுள்ளோம் என்று கூறுவதனை நியாயம் அற்ற விடயமாக எடுத்துக்காட்டப்பட்டது.

எனது பாரம்பரிய வீடு ஒரு வரலாற்று பாரம்பரியமிக்க வீடு ஆகும். தயாரின் தந்தையார் தமிழரசுக்கட்சியின் செனட் சபை உறுப்பினரான மாணிக்கம் அவர்கள் வாழ்ந்த வீடு. அந்த வீட்டுக்கு பல ஆண்டுகால வரலாறு இருக்கின்றது.

குறித்த வீட்டினை என்னிடம் ஒப்படையுங்கள் என்று நான் பிள்ளையானிடம் பல தடவைகள் கோரிக்கை விட்டிருந்தேன்.

இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது அந்த வீட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றோம் வீட்டினை விற்றுவிடுங்கள் என்று என்னிடம் கேட்டார்கள். நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு அது. அந்த வீட்டினை விற்பதற்கு எனக்கு உடன்பாடு இருக்கவில்லை.

முக்கியமாக அரசியலில் இருக்கும் நான் கூட மிகவும் கஸ்டத்தின் மத்தியிலேயே இந்த வழக்கினை முன்னெடுத்தேன். இலட்சக்கணக்கில் எனக்கு செலவு ஏற்பட்டது. இறுதியாக மட்டக்களப்பு நீதிமன்றம் உண்மையினை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்திருக்கினறது.

நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பினை மதிப்பதற்கான சந்தர்ப்பம் பிள்ளையானுக்கு கிடைத்திருக்கின்றது. இன்னொருவரின் வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு நான் எவ்வளவு வேண்டுமானாலும் தருகின்றேன் எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்பது தவறான விடயமாகும்.

அத்துடன் பிள்ளையான் எனக்கு நாமல் ராஜபக்ஸ ஊடாகவும் அந்த வீட்டினை விற்குமாறு கூறியிருந்தார். நான் அவருக்கு தெளிவாக கூறினேன் உங்களது வீரஹெட்டியவில் இருக்கும் வீட்டினை விற்பீர்களா. அதேபோல்தான் இது எனது பாரம்பரிய வீடு, அதனை விற்கமுடியாது என கூறியிருந்தேன்.

இன்னும் சில வாரங்களுக்குள் அந்த வீட்டுக்குள் நாங்கள் செல்லமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

அதோடு நீதிமன்ற தீர்ப்பினை மதித்து பிள்ளையான் அவர்கள் வீட்டினை என்னிடம் ஒப்படைத்தார் என்றால் அது நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒருவேளை காலத்தினைப் போக்குவதற்காக சில வாரங்கள், சில மாதங்கள் இருக்கவேண்டும் என்று செயற்படுவாரானால் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கையினை நான் முன்னெடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் 30வருடமாக எனது வீட்டுக்குள் போகமுடியாத நிலை காணப்பட்டு மீண்டும் போவதற்கான சந்தர்ப்பம் வரும்போது நான் அதனை விட்டுச் செல்லமுடியாது எனவும் அருண் தமிபிமுத்து தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.