இலங்கை, பிலிப்பைன்ஸ் உடன்பாட்டு பொருளாதார அரசியல்!


பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் தற்போதுள்ள பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு நாட்டு அமைச்சர்களுக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் தற்போதுள்ள பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய உத்திகள் குறித்து கவனம் செலுத்துவதற்கு இரு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்கள் நேற்று (22) ஒப்புக்கொண்டனர்.

பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டுவிழாவில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தை வாழ்த்துவதற்காக வெளிநாட்டு அமைச்சர் தியோடோரோ எல். லோக்சின் அவர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்ட தொலைபேசி உரையாடலொன்றின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பிலிப்பைன்ஸ் தூதரகம் அமைப்பது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையே விமானங்களைத் தொடங்குவது குறித்தும் இரு தரப்பினரும் இந்த தொலைபேசி உரையாடலின் போது கலந்துரையாடினர். வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புக்களைப் பெறுவதிலான பிலிப்பைன்ஸின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், கிடைக்கக்கூடிய வழிமுறைகளை அடையாளம் காணவும், இந்த முயற்சியில் இலங்கைக்கு உதவுவதற்கும் பிலிப்பைன்ஸ் வெளியுநாட்டு அமைச்சர் ஒப்புக் கொண்டார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் ஒன்றிணைந்து பணியாற்றவும், இரு நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளுக்கிடையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான அதிக வாய்ப்புக்களை வழங்கவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளை பேணுவதில் கடந்த 60 ஆண்டுகளில் அளித்த ஆதரவுகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் நன்றிளை அமைச்சர் குணவர்தன பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.