அத்தியாவசிய பொருட்கள் நிலையான விலையில் விற்பனை!
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்கள் நிலையான விலையில் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி, மா, சீனி, பருப்பு, டின் மீன், நெத்தலி, வெங்காயம், கிழங்கு, முட்டை மற்றும் கோழி இறைச்சி போன்ற அத்தியாவசிய பொருட்கள் இவ்வாறு விலை நிர்ணயத்திற்கு உள்ளாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பொருட்கள் தொடர்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் விநியோகம் செய்வதற்கான விலை மனு கோரப்பட உள்ளதாகவும், இது தொடர்பில் பத்திரிகையில் இந்த மாதம் விளம்பரம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விலை மனுக்கள் கோரப்பட்டு குறைந்த விலையில் பொருட்கள் கொள்வனவு செய்யும் நடைமுறையொன்றை வர்த்தக அமைச்சு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் சதொச, கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையான விலை குறித்த நடவடிக்கை எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை