வெள்ள நீருக்கு மத்தியில் வாழும் நாவற்குடா கிழக்கு மக்கள்!


 மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் 15நாட்களாக வெள்ளநீருக்கு மத்தியிலேயே இன்னல்களுடன் நாளாந்த கடமைகளை செய்து வருகின்றதாக குறிப்பிடுகின்றனர்.

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் பெய்த அடைமழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ளநீர் தேங்கியது. இந்நீர் மக்கள் குடியிருக்கும் குடியிருப்புக்காணியைச் சுற்றியும், வீடுகளுக்கும் உட்நுழைந்தது. இதனால் இங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். குறித்த வெள்ளம் ஏற்பட்டு 15நாட்கள் கடந்திருக்கின்ற நிலையில் வெள்ளநீர் இன்றுவரை வடிந்தோடாமையினால் நாள்தோறும் அழுக்குநீருக்குள்ளே வாழ்வை கழித்துக்கொண்டிருப்பதாக அங்கலாக்கின்றனர்.

வீட்டினைச்சுற்றியுள்ள காணியில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதனால், வெளியில் செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளியில் செல்கின்ற போது அழுக்கு நீரில் கால்வைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதுடன், அதனால் காலில் கிருமிகள் தொற்றி, கால்களில் பல நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலசலகூடங்களை பாவிக்கமுடியாமலும், மலசலகூடங்களுக்கு செல்ல முடியாமலும் நாள்தோறும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும், வீடுகளைச் சுற்றி நீர் உள்ளமையினால் வீட்டின் நிலத்தில் கசிவு ஏற்பட்டு மிகுந்த குளிராக இருப்பதெனால் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கவேண்டியவர்கள், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தொற்று நிலைமையினை கருத்தில் கொண்டு இடம்பெயர்ந்தும் செல்லமுடியாது. அழுக்கான நீரின் மத்தியில் துன்பவியலை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். குறித்த மக்களின் துயரினை 15நாட்கள் கடந்தும் இன்னமும் தீர்க்காமை குறித்து மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதுடன், உடனடியாக இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.