நாட்டு மக்களுக்கு ராம்நாத் கோவிந்த் விசேட உரை!


 இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று (திங்கட்கிழமை) மாலை உரையாற்றுகிறார்.

குடியரசுத் தலைவரின் உரை மாலை 7 மணி முதல் அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளிலும் ஒலிபரப்பப்படுவதுடன், அனைத்து தூர்தர்ஷன் அலைவரிசைகளிலும், ஹிந்தி மற்றும்  ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்படவுள்ளது.

தொடர்ந்து மாநில மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா நாடெங்கும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்பத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில்  வீரர்களின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கிறார். 45 ஆண்டுகளில் முதன்முறையாக வெளிநாட்டு விருந்தினர் இல்லாமல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அணிவகுப்பு நீளம்,  வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒன்றரை லட்சம் பேர் பார்வையிடும் இந்நிகழ்ச்சியில்  இந்தாண்டு 25 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.