வல்லினம் - பாகம் 4!!


" ஓர் அம்மா கடைக்குப் போனா, ஒரு டசின் பென்சில் வாங்கி வந்தா, அதன் நிறம் என்ன???" ஆரபியோடு தரையில் பாய்விரித்து அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள் பரிதி. 


இந்தக் காட்சியை தூரத்திலேயே கண்டுவிட்ட சீராளன், கொடுப்பிற்குள் சிரித்தவன், 'வயது ஏறிவிட்டபோதும் இவங்க இன்னும் குழந்தைத்தனம் போகாதவங்க' மனதிற்குள் நினைத்துக்கொண்டான். 


அக்காவையும் தம்பியையும் கண்டதும் அவசரமாய் அவ்விடம் விட்டு எழுந்த ஆரபி, "அக்கா...அது ...பரிதிக்குட்டிதான்...." இழுத்தாள். 

"எனக்குத் தெரியுமே, இந்த வால்தான் உன்னை இழுத்துவைச்சு விளையாடியிருக்கும் எண்டு, இல்லையெண்டால் அத்தையோட கோபம் எண்டிருப்பா, நீயும் உடனே, சரியெண்டு விளையாடப் போயிருப்பாய்,"

"அச்சச்சோ..... எப்பிடியம்மா, பாத்தமாதிரியே சொல்லுறீங்கள்?" அகன்ற தன் விழிகளை விரித்தாள் குழந்தை பரிதி. 

"உன்ர வால்த்தனம் எனக்குத் தெரியாதே, எல்லாம் தெரியும், ஆரபி, நீ இவளுக்கு நிறையச் செல்லம் குடுக்கிறாய்,......"

"அக்கா, அவ குழந்தை, விடுங்கோ, அவளுக்கில்லாத செல்லமே...... "

"ஏன் நாங்கள் மட்டும் குழந்தையள் இல்லையோ?" சண்டைக்கு வந்தனர் பரிதிக்கு மூத்தவர்களான பாடினியும் பகலவனும்.

"நீங்களும் குழந்தையள்தான், என்ர செல்லம் உங்களுக்கும்தான், வாங்கோ வாங்கோ,"  இருவரையும் இறுக்கி அணைத்துக்கொண்டாள் ஆரபி. 

எல்லோரும் வட்டவடிவமாக வரிசையாக அமர்ந்துகொள்ள, சிறு கிண்ணங்களை எடுத்து ஆளுக்கொன்றாக கொடுத்த ஆரபி, பச்சையரிசி பால் சேர்த்த இலைக்கஞ்சியை வார்த்தாள். 


பயறு வாசத்துடன், கஞ்சி சுவையாக இருந்தது. கரண்டி கொண்டுவரவில்லையே....மெல்ல இழுத்த ஆரபி, என்னசெய்வதென யோசிக்க சட்டென்று எழுந்த சீராளன், தலைக்கு மேலே இருந்த பலாமரத்து கெட்டு ஒன்றை வளைத்து சில இலைகளை கொய்தான். இப்ப கரண்டி தாறன், என்றபடி, இலையை உள்வளமாக மடித்து ஒவ்வொருவரிடமும் கொடுத்தான். வியப்பாய் பார்த்தாள் ஆரபி,

இந்த விவசாய மக்களின் நடைமுறை வாழ்க்கை என்பது எவ்வளவு வித்தியாசமானது, இதே,  ஊரில் என்றால் நிச்சயமாக, அவளது அண்ணனின் பிள்ளைகளுக்கு  கரண்டிக்குப் பதிலாக இப்படி பலா இலையைக் கொடுத்திருந்தால் ரணகளம் ஆக்கியிருப்பார்கள் அந்த இடத்தை, அதுவும் அவர்களுக்கு மேலாக அண்ணியின் அலப்பறையைக் கேட்கவே வேண்டாம். அது கிடக்கட்டும், அவர்களுக்கு இப்படி கீரை சேர்த்த பால்கஞ்சி என்றாலே என்னவென்று தெரியாதே, அவர்களின் உணவு வகை எல்லாம் தோசை, இடியப்பம், போன்றவை தான்,  அதிலும் இப்ப கொஞ்ச நாளாக கொத்தும், பீட்சாவும்தான் அடிக்கடி உண்பது...பெருமூச்சு ஒன்றை மெல்லவே வெளியேற்றியபடி அவர்கள் அனைவரும் கஞ்சி குடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 


"நீங்களும் குடியுங்கோ அத்தை....." பரிதிதான் வில்லங்கம் செய்தாள். சீராளனுக்கு பரிதியைப் பார்க்க பொறாமையாக கூட இருந்தது, அவள் சிறுபெண் என்பதால் ஆரபியை முறை சொல்லி அழைத்துவிடுகிறாள், ஆனால் மற்றவர்களால் அப்படி முடியவில்லையே, அவன்கூட வாங்கோ...போங்கோ என்பதே தவிர எந்த முறையையும் சொல்லி ஆரபியை அழைப்பதில்லையே, 

அவளை எப்படி முறைசொல்லி அழைப்பது என்ற தயக்கம் அவனுக்கும் இருக்கிறதே, இன்றைக்கு அவன் அண்ணி என்று அழைத்துவிட, காலம் வேறொரு வாழ்க்கையை எழுதியிருந்தால், அதனால் காலம் முழுவதும் இந்த வீட்டிலேயே வாழ்ந்துவிட முடியுமா?


கம்பிகளை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்  கடல்வேந்தன். உணர்வுகள் அவனுக்குள் கொப்பளித்தது. இந்த சிறைக்கம்பிகளுக்குள் அவன் வாழ்க்கை அடைக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தது. சிறையில் அடைக்கப்பட்டது கூட அவனுக்கு வலியானதல்ல, தான் எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாக நிறைவேற்றமுடியவில்லையே என்ற ஏக்கம்தான் அவனுக்கு மிக வேதனை தருவது. 

அதற்குப்பின்னர் காலம் பல கோரத் தாண்டவத்தினை ஆடி முடித்துவிட்டதே, இனியென்ன செய்யமுடியும்? யாரிடம் சொல்லியழ? அவனுக்குள் புதைந்துகிடந்த நினைவுகள் அவனது அனுமதி இல்லாமலே தன் சிறகுகளை விரித்து சிந்தனை வானில் உலாப்போனது. 



அவர்களின் சொந்தமண் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை, அவனுக்கு முன்னர் இரண்டு  அண்ணாவும் அக்காவும்தான். வீட்டின் கடைக்குட்டியான அவனுக்கு செல்லமும் அதிகம்தான். அப்பாவைவிட மூத்த அண்ணன் செந்தமிழ் மீது  அவனுக்கு அன்பு அதிகம், தனக்குப்பின் உள்ள தனது சகோதர்ர்கள் மீது அண்ணனுக்கும் அதிக பாசம்தான். அதிலும் கடைக்குட்டியான இவன் மீது சற்று அதிகமான பாசம் என்றுதான் சொல்லவேண்டும். பத்து ஆண்டுகள் இளையவனான தன் தம்பியை எப்போதும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே தான். அந்தக்காலம் மிக அருமையான ஒரு பொற்காலம், உயர்தரம் முடித்துவிட்ட அண்ணன், அப்பாவோடு கடற்தொழிலுக்குச் சென்றுவருவதை வழக்கமாக்கியிருந்தான். காலையில் தன் இடத்தில் இருந்து எழுந்துவந்து ஒருதடவையேனும் இவனது படுக்கையில் படுத்தபடி, சண்டைபோடாமல் எழும்பவேமாட்டான். அவனது செல்லச்சண்டை பற்றி தெரிந்திருந்தாலும், அம்மாவும் அண்ணனை கத்தாமல் விட்டதில்லை. 

ஒவ்வொருநாளும் தொழிலுக்குச் சென்று திரும்பும் போது, தம்பிக்கென்று விசேசமாக ஏதாவது கொண்டுவருவது வழமை. மற்றைய இருவரும் சண்டை பிடித்தாலும் அவன் அதனைப் பொருட்படுத்துவதேயில்லை, அப்பாதான் மற்ற இருவருக்கும் ஏதாவது வாங்கிவருவார், மண் மீட்பிற்கான போர் உக்கிரமாக இருந்த அந்த நாட்களில்தான், அந்தக் குடும்பத்தில் முதலாவது பிரிவு ஆரம்பமானது, 


தொடரும்....


தமிழருள் இணையத்தளம்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.