வல்லினம் 5- கோபிகை!!

 


அப்போது கடலுக்கு பன்னிரண்டு வயது, அன்று ஒரு சோகம் தரப்போகும் நாள் என்று யாரும் நினைக்கவில்லை, என்ன நினைத்தோ, திடீரென்று, தானே சமைப்பதாகச் சொல்லி, கணவாய்க் கறியும், நெத்தலி சொதியும்வைத்து, முட்டையும் பொரித்து எல்லோருக்கும் சாப்பாடு தந்த அண்ணன், கடலை மடியில் இருத்திக்கொண்டு நிறையநேரம் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தான். 

"கடல், நீ நல்லா படிக்கவேணும், படிச்சு கெட்டிக்காரனாக வந்து, அப்பாவையும் அம்மாவையும் பாக்கவேணும், அண்ணா இல்லாட்டிலும் நீ அழக்கூடாது, அக்காவோட சண்டை பிடிக்கக்கூடாது, எனக்கு எண்டு ஒரு கடமை இருக்கு, அதைச்செய்யப்போறன்"

அண்ணன் சொன்னது புரியாமல் தலையை ஆட்டிக்கொண்டிருந்தான் கடல், வீதியில் நடக்கும் வீர நெஞ்சம் கொண்டவர்களை ஆசையாய் பார்க்கும் அண்ணன், அவர்களோடு கூட நடக்கப்போகிறான் என்பது சிறியவனான கடலுக்கு அப்போது தெரியாது, 

மாலை அதிக நேரமாகியும் அண்ணன் வீட்டிற்கு வரவில்லை, மகனைக் காணவில்லையே என்று கவலைப்பட்ட அம்மாதான், அண்ணனின் மேசையில் இருந்து அந்தக் கடிதத்தை எடுத்துவந்து அப்பாவிடம் கொடுத்தார், 

"என் தேசத்தாயைக் காக்க புறப்படுகிறேன், தாயே விடைகொடு" என்று வீட்டில் அனைவருக்குமாக தான் போகின்ற பாதையை தெளிவுபடுத்திருந்த கடிதம் அது. பன்னிரண்டு வயதில் கடலுக்கு அதன் பொருள் சரியாகப் புரியவில்லை. அம்மா அழுது தீர்த்தா, அப்பாதான் சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார், 

"அழாதையப்பா, பிள்ளை எங்க போட்டான், போராடத்தானே, எத்தினை பிள்ளையள் இப்பிடி களத்தில நிக்குதுகள், அதில எங்கட பிள்ளையும்சேர்ந்து நிக்கட்டுமன், எல்லாரும் சுயநலமா இருந்தா முடியுமே,"

"அதில்லையப்பா, மூத்த பிள்ளை, என்ர கண்ணுக்குள்ளவைச்சு வளத்த பிள்ளை, அம்மா தவிப்பா எண்டு யோசியாமல் போட்டானே......" 

"என்னப்பா விசர்க்கதை சொல்லுறாய், உன்னையும் என்னையும் தன்ர தம்பிதங்கச்சியையும், இந்த மண்ணில இருக்கிற எல்லா உறவுகளையும் அதிகமா நேசிச்சதாலதானே பிள்ளை இப்பிடி ஒரு முடிவு எடுத்திருக்கிறான், ஆழமான நேசம் கொண்டவர்களாலதான் இப்பிடி தேசத்தை நேசிக்கவும்முடியும்" 

"அது சரிதான்.. ஆனா மனசு ஆறுதில்லையே......."

அம்மா புலம்பியது இப்பவும் காதில் ஒலித்தது கடலுக்கு. 

நாட்கள் ஓடியது. அண்ணன் இல்லாத வீட்டில் ஒரு வெறுமை தொற்றிக்கொண்டது. கடலுக்கு உண்ணவோ உறங்கவோ பிடிக்கவில்லை, அண்ணா சொன்ன வார்த்தைக்காகவே நன்றாகப் படித்தான், ஒருவருடம் ஓடிவிட, அண்ணன் ஒருநாள் திடுதிப்பென்று வீட்டிற்கு வந்து நின்றார். 


அரும்பு மீசையில் வாலிபத்தை எட்டிப்பிடிக்கும் தோற்றத்தில் இருந்த அண்ணன், உயர்ந்த மிடுக்கான தோற்றத்தில் வந்ததும் வீட்டில் எல்லோருக்கும் ஆச்சரியம். அண்ணனை இறுக்கமாய் அணைத்தபடி போகவிடாமல் அழுதான் கடல். ஒருவாறு தம்பியைச் சமாதானப்படுத்தி விட்டுச்சென்ற அண்ணனின் சோகமுகம் கடலின் நினைவில் இருந்து மறைந்ததே இல்லை. காலம் உருண்டோடியது, அதன் பின்னரான யுத்தகாலம் அவர்களை வன்னிக்குப் போகவைத்தது. இரண்டாவது அண்ணாவும் அக்காவும் நன்றாகப் படித்தார்கள். அவர்களைவிட படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் கெட்டிக்காரனாக இருந்தான் கடல். 

பயிற்சி மாஸ்ரராக இருந்த அண்ணா, எப்போதாவது வீட்டிற்கு வருவதுண்டு, ஒருமுறை அண்ணாவோடு கூட வந்தவர்தான், போர்ப்பிரியன். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அவருக்கு பெற்றவர்கள் இல்லை, முன்னைய இனக்கலவரத்தில் பெற்றவர்களை இழந்துவிட்ட அவர், தாத்தா வீட்டில் வளர்ந்து பின்னர் தேசவிடுதலைக்காய் தன்னை இணைத்துக்கொண்டவராம், அவரும் அந்த வீட்டின் ஒரு பிள்ளையாகிப்போக அம்மா இருவருக்காகவும் கோயில், விரதம் என்று வேண்டத் தொடங்கினா. 

போர்ப்பிரியன் அண்ணாவின் சிரிக்கவைக்கும் பேச்சும், துறுதுறுவென்ற செயற்பாடுகளும் வீட்டில் எல்லோருக்கும் பிடித்துவிட்டது.  அவர் மட்டும் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதுண்டு. அம்மாவிடம் வந்து சாப்பிட்டுப்போனால்தான் அம்மாவிற்கு நிறைவு. 

அண்ணா அவர்களை விட்டுப்பிரிந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. வாழ்க்கை பல மாதிரி மாறிக்கொண்டிருந்தது. அக்காவும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி படித்துக்கொண்டிருந்தாள். சின்ன அண்ணா வங்கியில் உதவி முகாமையாளராக இருந்தார். ஒரு வருடமாகியும் அண்ணா வீட்டிற்கு வரவில்லை, போர்ப்பிரியன் அண்ணா வரும்போதெல்லாம், அம்மா கேட்டுக்கொண்டே இருப்பா, 

"வருவான் அம்மா......" பெருமூச்சோடு சொல்வார். அதன் பின்னர் ஒருநாள் அண்ணா திடீரென்று ஐந்துநாள் விடுப்பில் வந்தார். போர்ப்பிரியன் அண்ணாவும் மறுநாளே வந்துவிட வீட்டில் ஒரே குதூகலம்தான். 

அண்ணாவே சமைத்து எல்லோரும் சாப்பிட்டதும், கடற்கரைக்குச் சென்று வலை தெரிந்து திரும்பியதும், அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டிருந்த அண்ணா, மற்றவர்களுக்கு நிறைய விடயங்களைச் சொன்னதும் ஏன் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. அருகில் இருத்திவைத்து அண்ணா பல நேரங்களில் கடலோடு கதைத்ததை கடல் சந்தோசமாய் கேட்டுக் கொண்டிருந்தான். ஐந்து நாட்கள் முடிந்து அண்ணா எல்லோரிடமும் விடைபெற்றுச் சென்றுவிட்டார். 

கடல் உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தான், அன்றுதான் பரீட்சையின் கடைசிநாள். காலையிலேயே மனம் சோர்ந்துதான் போனது கடலுக்கு. அம்மாவும்,  "ஏதோ பதற்றமாகிடக்கு, பிள்ளையள்  எங்க நிக்கிறாங்களோ, எனக்கூறிக்கொண்டே கோயிலுக்குப் போனதோ, அல்லது. அக்காவின் கைபட்டு சுவரில் மாட்டியிருந்த அண்ணாவின் படம் விழுந்து கண்ணாடி சிதறியதோ ஏதோ ஒன்று எல்லோருக்கும் பயத்தைக்கொடுக்க அந்தப் பயத்துடனே பரீட்சைக்குச் சென்றுவிட்டான் கடல்.  

அன்று நண்பர்கள் எல்லோரும் சந்தோசமாக இருந்தாலும் ஏனோ கடலுக்கு மட்டும் மனம் அடித்துக்கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்தவன், தனது அறைக்குள் புகுந்துகொண்டு விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான்.  நேரம் நான்கு மணியைக் கடந்துவிட்டது. யாரும் சாப்பிடவில்லை போல, அம்மாதான் ஒவ்வொருவராய் கூப்பிட்டுக் கொண்டிருந்தா. அப்பாவும் அவனும் அக்காவும் சாப்பிட்டு கைகழுவி விட்டனர். அம்மா கையில் சாப்பாட்டைத் தூக்கவும் சின்ன அண்ணா ஓட்டமாய் ஓடிவரவும் சரியாக இருந்தது. 

"என்னப்பா...ஏன் இப்பிடி ஓடிவாறாய்,"  அப்பா கேட்டுக்கொண்டிருக்க, "அப்பா....அப்பா.....ரெண்டு அண்ணாக்கள் வீட்டதான் வருகினம், அவையள் வாறதைப்பாத்தா எனக்கு ஏதோ மாதிரிக்கிடக்கு, நேற்று கடலில் கரும்புலி அடிச்சிருக்கினம், ஆமிக்கு சரியான சேதமாம்" 

"சரி சரி,  பதற்றப்படாதை, என்னெண்டு கேப்பம், 

" அப்பா....." வாசலில் கூப்பிடும் சத்தம். 

"வாங்கோ ....தம்பியவை வாங்கோ....." அம்மா அழைத்ததும் உள்ளே வந்தவர்களின் முகத்தில் சோகத்தின் ரேகைகள், 

"என்னப்பா......" பதற்றமாய் அப்பா கேட்க, 

"அப்பா......உங்கட மகன், லெப்கேணல் சுடர்வேந்தன், நேற்று கடலில் வீரச்சாவு. அவர் கரும்புலியா ......வெடிச்சிட்டார்"

அம்மா ஓவென்று கதற, அப்பா நெஞ்சைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துவிட, அக்கா ஓப்போய் அம்மாவையும், சின்ன அண்ணா அப்பாவையும் தாங்கிக்கொண்டனர். வந்திருந்த அண்ணாமாரும் அப்பாவின் அருகில்சென்று அமர்ந்துகொள்ள, கடல் ஒருகணம்தான் அந்த இடத்தில் நின்ற யோசித்தது. அவசரமாய் அறைக்குள் நுழைந்து, சேட்டைப்போட்டவன், விரைந்து நடந்துவிட்டான். 

அப்போதிருந்த மனநிலையில் யாரும் கவனிக்கவில்லை, இரவாகியும் அவனைக் காணவில்லை என்றதும்தான், வீட்டினர் தேட ஆரம்பித்தனர். அப்போதுதான் அவன் அவசரமாய் கிறுக்கிவைத்த கடிதம் அக்காவின் கண்ணில் பட்டிருக்கிறது,

அம்மா, அப்பா...... என் அண்ணாவின் கையில் இருந்த துப்பாக்கி ஒபோதும் கீழே விழுந்துவிட நான் அனுமதிக்கமுடியாது, நான் புறப்படுகிறேன், அதனை என் கைகளில் தாங்க....

இப்படிக்கு 

கடல் 

'படித்ததும் வீட்டில் ஓலம் ஓயவில்லை'  என பார்க்க வந்தபோது அக்கா சொன்னது அவனது நினைவில் வந்தது.  

"அண்ணா....மணிச்சத்தம் கேட்டு எவ்வளவுநேரம், வாங்கோ சாப்பாடு எடுக்கப்போவம்"  இசையாளன் கேட்டதும்தான் சுயநினைவிற்கு வந்தான் கடல். 

கடலுக்கு கண்கள் கலங்கியிருப்பதைக்கண்ட இசையாளன், 

"என்ன அண்ணா, வீட்டுயோசனையா?" என்றான். 

"வீடு எண்டு சொல்ல எனக்கு யாரடா இருக்கிறது," 

ஏன் அண்ணா, அப்பிடிச் சொல்லுறியள், அப்பா அம்மா இல்லாட்டி என்ன, அக்காவும் அண்ணாவும் இருக்கினம்தானே, 

"அக்கா பாவம், தன்ர வாழ்க்கையே கேள்விக்குறியா நிக்கேக்க அது என்னதான் செய்யும், அண்ணாதான் எங்களை எப்பவோ தூக்கிப் போட்டிட்டாரேடா,"

"விடுங்கோ அண்ணா, எல்லாம் ஒருநாள் சரியாகும்,"

"அதுசரி......வாடா... "

கூடநடந்த இசையாளனுக்கு வருத்தமாக இருந்தது, 'பாவம் கடல் அண்ணா, எவ்வளவு கெட்டிக்காரன், கடைசியில இப்பிடி ஒரு நிலையில எவ்வளவுகாலம்......' மனதுக்குள் சொல்லியபடியே கடலுக்கு பின்னால் நடந்தான். 


தொடரும் ...

தமிழருள் இணையத்தளம்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.