காட்டுவிலங்கிலிருந்துதான் கொரோனா பரவியிருக்கலாம்!


 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும் தெரிவித்துள்ளன.

சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு சீனாவுக்குச் சென்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வூஹான் சந்தையில் மருத்துவக் குழு ஆய்வு நடத்தியது. மேலும், முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட மருத்துவமனைகளிலும் இக்குழு ஆய்வு செய்தது. 12 நாள் ஆய்வின் பின்னர் இன்று தனது முடிவுகளை சீனாவின் சுகாதாரத்துறையுடன் இணைந்து, நிபுணர்குழு பகிரங்க செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்புக் குழு கூறும்போது, “சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. டிசம்பர் மாதத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கு சாத்தியமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளம்பன்றி, மூங்கில் எலி போன்ற காட்டு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவியிருக்கலாம். வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு நேரடியாக அல்லது உறைந்த உணவுப் பொருட்களின் வர்த்தகம் மூலமாகவும் மனிதர்களிற்கு பரவியிருக்க வாய்ப்புள்ளதாக குழுவின் தலைவர் பீட்டர் பென் எம்பரெக் கூறினார்.

வைரஸ் நேரடியாக விலங்குகளிடமிருந்து மனிதருக்கு சென்றதா அல்லது ஒரு இடைத்தரகர் மூலமாக பரவியதா என்பதை முடிவு செய்ய முடியவில்லை. ஆய்வக விபத்தின் விளைவாக வைரஸ் பரவ மிகவும் சாத்தியமில்லை என்றும் கூறினார்.

கொரோனா வைரஸ் ஆராய்ச்சி செய்யும் ஆய்வகங்களிலிருந்து தற்செயலாக வைரஸ் கசிந்தது என்ற கோட்பாடு குறித்து மேலதிக விசாரணையை தனது குழு பரிந்துரைக்காது என்றும் கூறினார்.

அதிகாரப்பூர்வமாக SARS-CoV-2 என அழைக்கப்படும் இந்த வைரஸ் மத்திய சீனாவின் வுஹான் நகரில் 2019 டிசம்பரில் பரவுவதைக் கண்டறிந்ததாகக்வும், வுஹான் கடல் உணவு சந்தைக்கு உள்ளேயும் வெளியேயும் இணையாக தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சந்தை தொற்றின் அசல் ஆதாரம் அல்ல என்பதை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முன்னதாக, பலத்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே வூஹானின் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை. உலகின் பல இடங்களில் கொரோனா பரவல் நிகழ்ந்துள்ளது என்று சீனா விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.