சொக்லேற் கனவுகள் 20- கோபிகை!!

 


எண்ணத்தில் 

நிறைந்தவளுக்கு

மனதிற்குள் புதிதாய் 

விதையொன்று 

முளைவிட்டது.


விதையின் தொடர்ச்சி 

பெருமரமாக,

அதன் நிழலில் 

இவள் இதம் கண்டாள். 


தறிகெட்டுப் பாய்ந்த

கற்பனைக் குதிரைக்கு

கடிவாளத்தை இட்டவள்,

எழுந்து வெளியே வந்தாள். 


மாடியில் நிற்க,

அழகாக தெரிந்தது,

அத்தையின் வீடு.

ஆதியைக் காணவில்லை,


பனித்துளிகள் 

வைரத்துகள்களாய் 

ஜொலிக்க, 

முற்றத்து மலர்கள்

இவளை 'வா...வா' என்பது

போன்ற பிரமை,


அவசரமாய் படியிறங்கி

அத்தைவீட்டிற்கு நடந்தாள். 

வழியில் எதிர்ப்பட்டான்

சந்துதன்....


'அனுதி...நானும்.....

உன்னைப் பாக்கத்தான்..'

இழுத்தவனுக்கு 

பதில் சொல்லாது

தரையைப் பார்த்தாள். 


இவள் எரிச்சலை 

அவன் வெட்கமென

பொருள்கொண்டு,

பேசத்தொடங்கினான். 


'எனக்கு  ...உன்னை....'

'அனுதி...எனக்கு 

எவ்வளவு பிடிக்கும்

என்றால்,.....,'


எதிர்பாராமல் அனுதி

விதிர்த்துப்போய் நிமிர,

அவசரமாய் இவள் 

கையைப் பற்றிவிட்டான்

சந்துதன்....


தானே உதறிவிட

நினைக்க,

'சந்துதன்......'

எங்கிருந்தோ கேட்டது

ஆதியின் குரல்.....


அவசரமாய் வந்தவன்,

கையைத் தட்டிவிட்டு,

கொத்தாகப் பிடித்தான்

சேட்டின் கொலரை.....


'டேய்.....

எங்க வந்து,

யாரட்ட......

என்ன சொல்றாய்,?'


விடயத்தின் 

விபரீதம் உணர்ந்து

'ஆதி....விடு.....

அவரை விடு......'

என்றபடி நின்ற அனுதியை

எரித்துவிடுவது போல

பார்த்துவைத்தான் ஆதி.....


'அனுதி உள்ள போ....'

இதுவரை வராத கோபத்தில்

இரைச்சலாய் அவன் உறும,

'இதென்ன......உன்ர அதட்டல்?

ஏன் இப்ப கத்துறாய்?'

அவள் பதில் கேள்வி கேட்டாள். 


அவன் மீதிருந்த எதிர்பார்ப்பு

அவன் மீதான கோபமானது.....

ஏக்கம், வலியதொரு

சினமாய் வெளிப்பட்டது

அவளிடமிருந்து.... 


'ஆதி...கையை எடு, 

நான் அவளைக் காதலிக்கிறன்...

அவளும் என்னை...'

சந்துதன் சொல்லுமுன்,

'சீ......'என்பது போல பார்த்தாள் 

அனுதி. 


அவள் பார்வையின்

பொருளுணர்ந்தவன் 

அவ்விடம் விட்டு

அவசரமாகவே நகர்ந்தான். 


'ஏன்டா..இவ்வளவு கோபம்?'

அனுதி பாய....

எதுவும் பேசாமல்

போக முற்பட்ட ஆதியின்,


கரம் பற்றியவள்,


'பதில் சொல்லிவிட்டுப் போ'

என்றதும்....

'என்ன பதில்?' என்றான். 

'ஏன் இவ்வளவு கோபம்?'

அவள் கேட்க,

அவன் மௌனமானான். 


'அவன் காதலிக்கிறானாம்,

அதைச் சொன்னான்,

நீ ஏன்டா இப்பிடி?'

உடும்பாய் பிடித்தாள். 


'நான் ......நானும்....

காதலிக்கிறன்டி,

அனுதி....அனுதி....எண்டு

நான் நித்தமும்

துடிக்கிற துடிப்புக்கு 

பெயர்தான் 

காதல் எண்டா 

நான் உன்னைக் 

காதலிக்கிறன்தான்டி'


'உன் நிழல்மாதிரி

உன்னோட கூடவே இருந்து

உன்னை ஒரு பூப்போல

தாங்க நினைக்கிற

என் அக்கறைக்குப் 

பெயர்தான் காதல் எண்டா

நான் உன்னைக் 

காதலிக்கிறன்தான்டி....'


'நான் இல்லாத 

ஒரு நொடியைக் கூட

உன்னால தாங்க முடியாதே

எனத் தவிக்கிற

என் தவிப்புக்குப் 

பெயர்தான் காதல் எண்டா

நான் காதலிக்கிறன்தான்டி.....'


அனுதிக்குள் 

ஆயிரம் நிலவுகள்

ஒரே பாதையில்

உலாப் போனது.....கனவுகள் தொடரும்

கோபிகை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.