விவசாயிகள் போராட்டத்தில் விபரீதம்

 


மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் நாளை 90ஆவது நாளை எட்டவுள்ளது. குடியரசு நாள் வன்முறையைத் தவிர வேறு பெரிய அசம்பாவிதங்களும் இல்லாமல் தொடரும் இந்தப் போராட்டத்தில் ஒரு சங்கத் தலைவரின் பேச்சால் விவசாயிகள் பயிர்களைத் தீவைத்து எரிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

அரியானா மாநிலம் கரக் புனியாவில் கடந்த வியாழனன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து எனப்படும் பெருங்கூட்டம் நடைபெற்றது. பத்தாயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் பேசிய பாரதீய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் தியாகத், அரசாங்கம் நினைப்பதைப் போல அவ்வளவு விரைவில் விவசாயிகளின் போராட்டம் முடிந்துவிடாது; மூன்று புதிய சட்டங்களையும் ரத்து செய்யும்வரை போராட்டம் ஓயாது என்று அழுத்தமாகக் கூறினார். அத்தோடு அவர் நிற்கவில்லை.

“இன்று மும்பைக்குப் பேரணியாகப் போகிறோம்; இப்படி நாடு முழுவதும் பேரணி செல்லவிருக்கிறோம்; விவசாயிகள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இடங்கள் அனைத்துக்கும் போகப்போகிறோம். இதற்காக அரசியலில் நுழையப்போவதில்லை. அது ஒரு நோய்...” என்ற ராகேஷ் தியாகத்,

“அறுவடைக்காக விவசாயிகள் ஊருக்குப் போய்விடுவார்கள் என மத்திய அரசு தவறாக எண்ணிக்கொள்ளக் கூடாது. அவர்கள் எங்களை நிர்பந்தத்துக்கு உள்ளாக்குவார்களேயானால் விவசாயிகள் தங்கள் பயிர்களையே அழித்துவிடுவார்கள். இந்தப் போராட்டம் இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிடும் என அவர்கள் நினைக்கக் கூடாது. அறுவடையையும் போராட்டத்தையும் ஒருசேர நடத்துவோம்” என்று பேசியிருந்தார்.

அவர் என்ன கணக்கில் பேசினாரோ, அவர் சொன்னதை அப்படியே செய்துகாட்டத் தொடங்கினார்கள், விவசாயிகள். உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே ராகேஷ் தியாகத் பெரும் செல்வாக்கு கொண்ட விவசாயிகள் சங்கத் தலைவர் என்பதை அறிந்தவர்களுக்கு அவருடைய பேச்சின் தாக்கம் வியப்பை அளிக்காது.

உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தின் குல்சகானா கிராமத்தில் சோகித் அலாவத் எனும் விவசாயி தன்னுடைய ஆறு பிகா வயலில் விளைந்த கோதுமைப் பயிர்களை கடந்த சனிக்கிழமையன்று டிராக்டரை விட்டு நாசம் செய்தார். ராகேஷ் தியாகத்தின் பேச்சுதான் தன்னை இப்படிச் செய்யவைத்ததாகக் கூறிய விவசாயி சோகித், காசிப்பூர் எல்லையில் போராடும் தியாகத்தைச் சந்திக்கப் போவதாகவும் பெருமிதத்தோடு கூறியிருக்கிறார். அவரின் இந்தச் செய்கை காணொலியாக இணையத்தில் பரவியது.

அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை அதே மாவட்டத்தைச் சேர்ந்த டெலிபுரா கிராமத்தில், டோனி எனும் விவசாயி நான்கு பிகா வயல் கோதுமைப் பயிர்களை முழுவதும் டிராக்டரை ஏற்றி நாசம் செய்தார். மோடி தலைமையிலான அரசாங்கம் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறாவிட்டால் அனைத்து பயிர்களை எரிக்கவும் தயங்க மாட்டோம் என அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

மூன்றாவது சம்பவம், முசாபர்நகர் பகுதியில் பைசி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள குட்டு சௌத்ரி எனும் விவசாயி, தன்னுடைய 10 பிகா கோதுமைப் பயிர்களை டிராக்டரை விட்டு அழித்துவிட்டார்.

குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காவிட்டால் இந்தப் பயிர்களை விளைவித்து என்ன செய்யப்போகிறோம் என கேட்கும் இவரும், தியாகத்தை நேரில் சந்திக்கப் போவதாகக் கூறினார்.

இரண்டு நாள்களில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த பயிரழிப்பு சம்பவங்கள், டெல்லி போராட்டக் களத்தையும் எட்டாமல் இருக்குமா? விவசாயிகளின் இந்தவகை எதிர்வினையால் அதிர்ச்சியடைந்தார், ராகேஷ் தியாகத்.

தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். விவசாயிகள் யாரும் இப்படியான செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நல்லவேளையாக ஊடகங்களில் பதிவானபடி, இந்த மூன்று சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்திருப்பது உறுதியாகியுள்ளது. மேற்கொண்டு இப்படியான சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.

பொதுவாக எல்லா தளங்களிலும் குறிப்பாக எரிந்துகொண்டிருக்கும் போராட்டக்களத்தில், வழிகாட்டும் தலைவர்களின் பேச்சு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த விவகாரம் முக்கியமான சாட்சியாகி இருக்கிறது.

சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள், கீழே கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது என்று!


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.