வல்லினம் 6 - கோபிகை!!
பல்கலைக்கழக வளாகம் அன்று அதிக இரைச்சலுடன் இருந்தது. ஆம், புகுமுக மாணவர்கள் அன்றுதான் இணைந்துள்ளனர். பயமும் பதற்றமுமாய் காலடி எடுத்துவைத்தாள் கானகி. வன்னிப் பெருநிலப்பரப்பின் முக்கியமான இடமான முல்லைத்தீவின் செம்மலை மண்ணிலிருந்து அவள் அந்தப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருந்தாள். யாழ்ப்பாணம், என்ற கலாச்சார கட்டுக்கோப்பிற்கு பெயர்போன மண்ணில் தன் பல்கலைக்கழக கல்வியை முடிக்கவேண்டும் என்பது அவளது கனவு, அவளது வீட்டினரின் கனவு, இன்று அந்தக் கனவிற்கான திறவுகோல். அவளது முதல் நாளைய பல்கலைக்கழக நாள். மனதோரம் இருந்த படபடப்பை ஓரமாக்கிவிட்டு அவசரமாய் நடக்கத்தொடங்கினாள்.
ஓடிவந்து வழிமறித்தது ஒரு கும்பல்,
'ஐயோ....ராகிங் போல....' படபடத்தது அவளது மனம்....
மருண்டபடி அங்கும் இங்கும் பார்த்தாள். அவளுக்கு உதவ யாரையும் காணவில்லை, அவளொத்த மாணவர்கள் யாராவது வந்தாலும் கொஞ்சம் தெம்பாக இருக்கும் போல தோன்றியது.
இதயத்தின் துடிப்பு அவர்களுக்கே கேட்கும் போல இருந்தது. முகமெங்கும் வியர்வைப் பூக்கள் அரும்பியது, தோளில் தொங்கிய பையின் கனம் தாங்க இயலாதது போல வலித்தது கைமூட்டு. ........
"ஏய், என்ன பாக்காத மாதிரி தெனாவெட்டா போறாய், நாங்கள் நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?" என்றனர்.
"அண்ணா....அது...வந்து....." அவசரமாய் அவள் போட்டுவிட்ட அண்ணாவில் சற்றே நிதானித்தது அந்தக் கூட்டம்.
இரட்டை பின்னல், கறுப்பு றிபன், கழுத்துவரை மூடின துப்பட்டா, அப்பப்பா....சாமியாரிணி மாதிரித்தான் இருக்கிறாய்,
அவள் எதுவும் பேசாமல் தலை கவிழ்ந்துகொண்டாள்.
"எந்தப் பள்ளிக்கூடம்?" என்றான் ஒருவன்.
"செம்மலை ....." அவள் சொல்லிமுடிப்பதற்குள்
"என்ன றிசல்ற்?" இடைப்புகுந்தான் மற்றொருவன்.
"ஏ, ரூ பி"
என்ன பாடம்?
"ஆட்ஸ்"
"சங்கீதமோ, நடனமோ?"
"நடனம்..."
"எங்கை ஒரு நடனம் ஆடு பாப்பம்..."
அப்போது அவசரமாய் அவ்விடம் வந்தான், ஆதித்தன்,
அவனைக் கண்டதும் கூட்டத்தில் சலசலப்பு,
"என்னடா இங்க, சத்தம்?"
"ஐயோ...ஆதி அண்ணா, சும்மாதான்,,,..."
கானகியின் முகத்தை உற்றுப் பார்த்தவன், "கானகி" என்றான்.
"ம்.....".
அவனை யாரென்று தெரியாததால், விழித்தபடியே தலையை ஆட்டினாள் கானகி.
"அண்ணா......"இடைச்சொருகலாய் ஒலித்தது ஒரு குரல்.
"என்னடா ...." உறுமினான் ஆதி.
"இல்லண்ணா, உங்களுக்குத்தான், உங்க பச்சிலயே ஆள் இருக்கே, பிறகென்ன,"
"இருக்கு....ஆனா...இது என் தங்கச்சி" மென்மையாய் சொன்னவனை ஆழமாய் பார்த்துவைத்தாள் கானகி.
"ஓ......டேய் வாங்கடா.....இது ஆதி அண்ணனுடைய தங்கச்சி என்றால் ....."
"சொல்லு ......சொல்லு......என் தங்கச்சி என்றால் உங்களுக்கு யார்?"
"தங்கச்சி" என்றார்கள் கோரசாய்.......
"ம்....இடத்தைக் காலி பண்ணுங்கோ..." என்றவன், அவளிடம் திரும்பினான்.
"கானகி, ஆரபி மச்சாள் போன் பண்ணினவா, அவதான் உன்ர படமும் அனுப்பியிருந்தா, உன்னைக் கவனமா பாத்துக்கொள்ளச் சொல்லி சொன்னவா, ஒண்டும் யோசிக்காதை, எனக்கு இஞ்ச கொஞ்சம் செல்வாக்கு இருக்கு, அதனால......."
"ஓமோம்....அண்ணா....உங்கட செல்வாக்கை நானும் பாத்தன் தானே, எல்லாரும் வெருண்டுபோய் நிண்டிச்சினம்,"
"என்ன கலாய்க்கிறியா,"
"இல்ல அண்ணா, உண்மையைத்தான் சொன்னன்,"
"சரி சரி, நீ போ, ஏதாவது சிக்கல் எண்டா என்னட்டச்சொல்லு, என்ன"
"அதுசரி, ஆனா எப்பிடிச் சொல்லுறது, என்ன புறாவின்ர வாலில கடுதாசி கட்டி அனுப்புறதோ?"
"ஏய்....நீ சரியான வாலாத்தான் இருக்கிறாய், என்ர இலக்கம் தாறன், குறிச்சுக்கொள்"
அவன் சொல்லச் சொல்ல அவசரமாய் குறித்துக்கொண்டவள், இனிமையாய் ஒரு புன்னகையை உதிர்த்து "நன்றி அண்ணா" என்றாள்.
கையசைத்தபடியே தானும் புறப்பட்டான் ஆதித்தன்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை