வல்லினம் 7- கோபிகை!!
வெயில் சுள்ளென்று சுட்டுக்கொண்டிருந்தது. வாய்க்கால் வழியாக ஓடிவந்த நீரை மறித்து வயலுக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தான் சீராளன். மனம் நெற்கதிர்களைப் பார்த்து ஒருகணம் சோர்ந்து போனது.
'நல்ல விளைச்சல், இந்தமுறை, வருமானம் பறவாயில்லை எண்டு நினைச்சிருக்க, கடைசி நேரத்தில தண்ணி இல்லாமல் இப்பிடி வாடிக்கிடக்கிறதே' என ஆதங்கப்பட்டான்.
ஊர்கூடி, கதைத்த பின்னர் அன்றுதான் குளத்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. மாறிமாறி ஒவ்வொருத்தராக வாய்க்கால் தண்ணியை மறித்து வயலுக்கு விட்டுக்கொண்டிருந்தனர். முதல் வயலாக சீராளனின் வயல்காணி இருந்ததால் அவனே முதலில் பாய்ச்சிக்கொண்டிருந்தான்.
தூரத்தில் தமக்கையும் அவனோடு உதவிசெய்துகொண்டிருந்தார். கொழுத்தும் வெயில் அவர்களுக்கு பழக்கப்பட்டது என்றாலும் அன்று அதிக உஷ்ணமாக இருந்தது. மாமரத்தின் கீழே மண்பானையில் இருந்த தண்ணீரை மாறிமாறி இருவருமாகக் குடித்து முடித்திருந்தனர். தாகம் வேறு வாட்டியது, அருகில் கிணறும் இல்லை, தண்ணிக்காக நிறையத்தூரம் நடக்கவேண்டும், யோசனையோடு மரத்தோரமாக சாய்ந்துகொண்ட தமக்கையைப் பார்க்கும்போது மனம் வலித்தது சீராளனுக்கு.
இளம் விதவை அவனது அக்கா, கணவனோடு வாழ்ந்த காலத்தில் பெருமிதமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அக்கா, அவரது இழப்பிற்குப் பின் மனதால் தளர்ந்துவிட்டிருந்தார். இருந்தாலும் தன் மூன்று பிள்ளைகளுக்காக மனதில் தைரியத்தையும் வைராக்கியத்தையும் வளர்த்துக்கொண்டு அவனோடு கூடச்சேர்ந்து கஸ்ரப்படுகிறா. அத்தான் மட்டும் இருந்திருந்தால்.......
எண்ணங்கள் வலிக்க, " என்னக்கா, களைச்சுப்போனியளே, நான் வரவேண்டாம் எண்டு சொன்னாலும் நீங்கள் கேக்கிறேல்ல, இப்ப பாருங்கோ, தண்ணியும் இல்ல, என்ன ஏதாவது செய்யுதே" படபடப்பாய் கேட்டபடி அக்காவின் அருகில் வந்தான் சீராளன்.
இல்லை...எனக்கொண்டும் இல்லை, கொஞ்சம் இருந்தால் சரி, சரியான வெயில்தானே, அதுதான் லேசா தலைசுத்துற மாதிரிக் கிடந்தது, வேற ஒண்டும் இல்லை,"
"அந்த கடைசி வயல் பெரிசுதானே, தண்ணி ஏறட்டும், அதுமட்டும் இருந்திட்டுப்போகலாம்" சொல்லிக்கொண்டே வந்து அமர்ந்தவனை கவலையோடு பார்த்த, இசையரசி,
"பசிக்கிதோ தம்பி" என்றதும்
இல்லை அக்கா, இன்னும் கொஞ்சநேரம்தானே. உந்த வயலுக்கு எறினா, பிறகு அங்கால சின்னத்துண்டுதானே" கட்டிப் போட்டுப் போவம்" என்றபடி மரத்தோடு சாய்ந்து அமர்ந்தான்.
ஏதோ யோசனையில் இருந்தவன் அப்படியே மரத்தில் சாய்ந்து உறங்கிவிட, தமக்கையின் உற்சாகக்குரல் உலுக்கி எழுப்பியது.
"என்னக்கா..."
"அங்கபார், ஆரபியும், பருதியும் சாப்பாடு கொண்டு வாறதை"
"அட...ஓமக்கா, இந்த வெயிலுக்கை என்னத்துக்கு வருகினமோ தெரியேல்ல,"
தண்ணீர் கானோடு ஓடிவந்த பருதி, தண்ணீர் கானை வைத்துவிட்டு தாயின் மடியில் அமர்ந்துகொண்டதும், "அம்மா, களைச்சுப்போனா, மாமான்ர மடியில வந்து இரு" என்றான் சீராளன்.
ஓடிவந்து தாவியபடி மாமனின் தோளைக்கட்டிக்கொண்டாள் பத்துவயதுப் பருதி.
"என்ன ஆரபி, நாங்கள் கொஞ்சநேரத்தில் வந்திடுவம்தானே, ஏன் இவ்வளவுதூரம் நடந்துவாறியள்?" தண்ணீரைக் குடித்துக்கொண்டே கேட்ட இசையரசிக்கு.
"அக்கா, சமைச்சுப்போட்டு சும்மாதானே இருக்கிறது, வயலைப் பாக்கவும் ஆசையாக்கிடந்தது, பருதியும் வந்த உடனே, கூட்டிக்கொண்டுவாறன்"
"நாங்களும் இன்னும் சாப்பிடேல்ல, அம்மாவுக்கு மட்டும் போட்டுக் குடுத்திட்டு, சின்னவைக்கும் போட்டு மூடிவைச்சிட்டு வந்திட்டன், வாங்கோ எல்லாரும் சாப்பிடுவம்"
"சரி...எடுத்துவையுங்கோ, நான் தண்ணியை மாத்திவிட்டிட்டு வாறன்"
"இண்டைக்கு தம்பியும் நானும் வந்திட்டம், கறி வாங்கப்போக ஒருத்தரும், இல்லை என்ன செய்தனி ஆரபி?"
"வீட்ட அண்டைக்கு, சீராளன் வலைஞர்மடத்து சினேகிதன் வீட்டயிருந்து கொண்டுவந்த சூடைக்கருவாடு கிடந்தது தானே அக்கா, அதோட, ஒரு மாங்காயும் பிடுங்கிப்போட்டு, குழம்பு வைச்சு, மரத்தில முருங்கையிலை பிடுங்கி வறுத்து விட்டனான்.
"ஆரபி, இஞ்ச வந்தபிறது எங்கட கஸ்ரப்பட்ட வாழ்க்கையை நீயும் பழகிப்போட்டாய்"
"இதில என்னக்கா இருக்கு, வறுமை இருக்கலாம், நிம்மதியில்லாத வாழ்க்கைதான் இருக்கக்கூடாது, நான் இஞ்ச வந்தபிறகு எவ்வளவு நிம்மதியா இருக்கிறன் தெரியுமே,"
கையோடு கொண்டுவந்திருந்த, சில்வர் தட்டுகளை எடுத்துவைத்து சோற்றைப் போட்ட ஆரபி, கருவாட்டுக் குழம்பை ஊற்றி, முருங்கையிலை வறையையும் வைத்தாள்.
வெயில் களைப்பிற்கும், பசியின் அளவிற்கும் ஆரபி போட்டுத்தந்த சாப்பாடு அமிர்தமாகத்தான் இருந்தது சீராளனுக்கும் இசையரசிக்கும்,
"ஆரபி....சாப்பாடு அப்பிடி ஒரு சுவையாக்கிடக்கு,"
"போங்கோ அக்கா......என்ன இருந்தாலும் நீங்கள் சமைக்கிறதுமாதிரி வராது"
"அப்பிடி இல்லை, ஒவ்வொருத்தர் செய்யிறது ஒவ்வொருவித சுவைதானே"
"ஓமம்மா... அத்தையின்ர சமையல் சூப்பர்" என்ற பருதியிடம், "இவ்வளவு நாளும் அம்மான்ர சமையல்தான் சூப்பர் எண்டுவாய், இப்ப அத்தைக்கு சூப்பர் சொல்லுறாய்" என்றான் சீராளன்.
"அப்ப அத்தை வரேல்ல தானே, அதனால அம்மா சமைச்சது சுவை, இப்ப அத்தை சமைக்கிறது சுவை" என்ற மகளைப் பார்த்து
"அடி.....ஆளைப்பார்..." என்ற தாயிடம் ஓடிவந்து விழுந்தாள்.
கோபிகை
தமிழருள் இணையத்தளம்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை