சொக்லேற் கனவுகள் 18- கோபிகை!!


சிரித்தபடி நடந்துவந்து

அவனைக் கடந்த அனுதி, 

சந்துதனின் அருகில்

சென்று நின்றாள். 


வாயெல்லாம் பல்லாக

வழிந்தபடி நின்றவனை

வெறித்தபடி பார்த்தான்

ஆதித்தன். 


'இவன் அடங்குறான் 

இல்லையே,'

'அது சரி, இவ சிரிச்சா

அவன் வழிவான் தானே,'

வார்த்தைகள் 

மோதிக்கொண்டன

அவனுக்குள்.....


சந்துதனுக்கும் அனுதி

மைத்துனி தானே, 

சாதாரணமாக அவர்கள்

பேசிக்கொள்வதை

நான் ஏன் இப்படி

கோபமாய் பார்க்கிறேன்? 

தன்னையே தான்,

கேட்டும்கொண்டான். 


கலகலவென பொழுது

நகர்ந்தது. 

தாத்தாவும் பாட்டியும்

தங்கச் சிலைகளென நிற்க,


உறவுகள் கூடினர், 

பூக்களைத் தூவினர், 

மகிழ்ச்சியின் கடலிலே

மணமக்களை ஆழ்த்தினர். 


தாத்தா பாட்டிக்கு 

நான்கு பிள்ளைகள்,

மூன்று அண்ணன்களுக்கு

ஒற்றைத் தங்கையாய்

அனுதியின் அம்மா.....


அண்ணன்களின், 

அன்பில் முக்குளித்து

பாசத்தில் தத்தளித்து

ராஜகுமாரியாய் வாழ்ந்த

ஒரே தங்கையின் மகளான 

அனுதி,

அவர்கள் அனைவருக்கும்

செல்ல இளவரசி. 


பெரிமாமா, சின்ன மாமா

குட்டி மாமா என 

அனுதியின் உலகமும்

மாமாமாரின் அன்பிலே

சுற்றுவது தான். 


அதிலும்,

ஆதியின் அப்பா, 

குட்டி மாமாவிடம்

செல்லம் சற்றே 

அதிகம் தான், 


சிறுவயது நாட்களில்

அவள் விழுந்தால்

அடி விழுவது 

ஆதிக்குத்தானே, 


அன்னை சகுந்தலாதான் 

அத்தனை பேரையும்

அன்போடு கண்டிப்பார், 

மருமகனுக்காக.....


விழா வீட்டிலே

பழையவை கதைத்தனர், 

நினைவுகளைச் சுவைத்தனர்,

கூடி நின்று குதூகலித்தனர், 


பந்தியில் நின்று

பாசத்தையும் பரிமாறினர்,

'அண்ணி பாயாசம் எங்கை?,'

'அப்பளத்தை போடுங்கோ',

'கீரைக்கிண்ணியை

தாங்கோ மச்சாள்', 

'பருப்பை கொஞ்சம்

அரக்கி வையுங்கோப்பா',


உறவின் பெயர்களில்

ஒரு ராகம் பிறந்தது அங்கே...

பூவான நேசங்கள்

வாசல் திறந்தது

பூக்காட்டிற்கு....


இத்தனைக்கும் நடுவே,

தேவதையாய் சுற்றினாள் அனுதி.

வந்தவர், நின்றவர் என

அத்தனை கண்களும்

அவளையே மொய்த்தன. 


'அனுதிக்கு சுத்திப் போடம்மா,'

அண்ணன்கள் சொல்ல,

வேப்பிலையோடு வந்தார்

அத்தை தேன்மொழி, 

ஆதியின் அம்மா.....


'மாமாஸ்.......'

உரக்கவே அழைத்தவள்,

'உங்கள் தங்கச்சி,

சுத்த வேஸ்ற்,' 

'என் அத்தைதான் 

எப்பவும் பெஸ்ற்'


சொல்லிய அனுதியிடம்,

'என்ன சொன்னனி?'

'என்ன சொன்னனி?'

சண்டைக்கு வந்தான் ஆதி. 


மாமாக்களின் முகங்களில்

சிறிதே வலி....

'தங்கையைச் சொன்னால்

தாங்க முடியாதோ?'

வம்பிழுத்தாள் அனுதி. 


'உன் அம்மா,

எங்கள் வீட்டு ராஜகுமாரி.....'

'அப்ப நான்....?'

கேள்வியை வீசினாள்.


எங்கள் வீட்டு இளவரசி....

பூவாய் மலர்ந்தது

அத்தனை முகங்களும்....


கனவுகள் தொடரும்

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.