அண்ணாத்த படப்பிடிப்பு துவங்குவது எப்போது?
ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ என ரஜினியின் கடைசி இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பே பெற்றது. அடுத்ததாக, ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. அதற்கு காரணம் இருக்கிறது. அஜித்துக்கு சிவா இயக்கிய வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு துவங்காமல் இருந்து வந்தது. ஏற்கெனவே 60% படப்பிடிப்பை கொரோனாவுக்கு முன்பாகவே முடித்திருந்தது படக்குழு. இறுதியாக, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் துவங்கியது. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாலும், ரஜினிக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு நின்றுபோனது.
இந்நிலையில், அண்ணாத்த படமானது வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்திற்கான படப்பிடிப்பை விரைவில் துவங்க இருக்கிறது படக்குழு. சமீபத்தில் கூட கடந்த ஜனவரி 29-ல் ரஜினியை போயஸ் இல்லத்தில் சென்று நேரில் சந்தித்தார் சிவா.
இறுதியாக, படத்திற்கான மூன்றாம் கட்டப் படப்பிடிப்பை மார்ச் முதல் வாரத்தில் துவங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு. அதுவும் ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடித்துவிடவும் திட்டம். இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் இறுதி செய்துவிட்டதாகவும் தெரிகிறது.
டி.இமான் இசையில் படத்திற்கான இசைக் கோர்ப்பு பணிகளும் ஒரு பக்கம் பரபரப்பாக நடந்துவருவதாகவும் சொல்கிறார்கள்.
-ஆதினி
கருத்துகள் இல்லை