செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி!

 


செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்கள் தயாராகிவிட்ட நிலையிலும் ரிலீஸ் ஆக முடியாமல் தவித்துவந்தது. ஒன்று, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றொன்று சந்தானம் நடிப்பில் ‘மன்னவன் வந்தானடி’.இவ்விரண்டு படங்களில் ஒரு படத்திற்கு ரிலீஸ் தேதி உறுதியாகியிருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் படம் தயாராகி நீண்ட நாட்களாகிவிட்டது. படத்தை க்ளோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு முதலில் சென்சாரில் ‘ஏ’சான்றிதழ் கிடைத்தது. உடனே, மறு தணிக்கைக்கு விண்ணப்பித்து ‘யு/எ’சான்றிதழும் பெற்றிருக்கிறது. பொருளாதார சிக்கலினால் படம் வெளியாகமுடியாமல் இருந்துவந்தது.

சமீபத்தில் ஓடிடியில் வெளியிடக் கூட படக்குழு முயற்சி செய்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இறுதியாக, பைனான்ஸ் சிக்கல் குறித்து கடந்த சில நாட்களாகப் பேச்சுவார்த்தையைத் துவங்கியது தயாரிப்பு தரப்பு. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் நீண்ட நாளாக வெளியாகாமல் இருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தை எப்படி ஐசரி கணேஷ் வாங்கி வெளியிட்டாரோ அது போல, இந்தப் படத்தின் சிக்கலை சரிசெய்து வெளியீட்டு உரிமையை ராக்போர்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதனால், எந்த சிக்கலும் இன்றி, நெஞ்சம் மறப்பதில்லை வருகிற மார்ச் 5ஆம் தேதி வெளியாவது உறுதியாகியிருக்கிறது. ஏற்கெனவே, நம்முடைய தளத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படமானது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறியிருந்தோம். அதுவாகவே செய்தியும் நிஜமாகியிருக்கிறது.

அதோடு, படத்திற்கான சின்ன புரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ பட வேலைகளில் இறங்கியிருக்கிறார் செல்வா. கூடவே, ஆயிரத்தில் ஒருவன் 2 படமும் லைன் அப்பில் இருப்பது நினைவுகூறத்தக்கது.

-ஆதினி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.