இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது!


இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது எனக் கருதுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தைத் தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாளும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் கொழும்புத் துறைமுக விவகாரம் போன்றவற்றில் இந்தியாவின் அதிருப்தி குறித்து ஊடகவியலாளரிக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “மீனவர் விவகாரத்தினைத் தீர்த்துவைப்பதற்காக தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அமைச்சு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்கள் ஆரம்பித்துள்ள நிலையில், கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்வதற்கான அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதேநேரம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட வரலாற்றுத் தொடர்பு இருக்கின்றது. உணர்வுகளால், உறவுகளினால், கலாசாரத் தொடர்புகளினால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் பிரிக்க முடியாதது.

அத்துடன், பூகோள அரசியல் ரீதியிலும் இலங்கையின் அமைவிடம் இந்தியாவிற்கு முக்கியமானது. அதேபோல், இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவுடனான உறவு அவசியமானது. எனவே, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவென்பது எப்பொழுதும் பலமானதாகவே இருக்க வேண்டும்.

இதேவேளை, நல்லாட்சி என் பெயரில் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தினை நடத்தியவர்கள் ஏற்படுத்திய குழப்பங்களில் ஒன்றுதான் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம்.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சீனாவிடம் கையளித்தார்கள். அதேபோன்று, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டார்கள்.

இவ்வாறு, பூகோள அரசியலைக் கையாளும் திறனற்ற சில தீர்மானங்களினால் எமது நாட்டைச் சுற்றிக் குழப்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

எவ்வாறெனினும், தனது 50 வருடகால அரசியல் அனுபவத்தில் தொழிற்சங்கப் போராட்டங்கள் பலவற்றை வெற்றிகரமாகத் தீர்த்துவைத்த அனுபவமுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிநடத்தலிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலுமான தற்போதைய அரசாங்கம் இந்த விவகாரத்தினை வெற்றிகரமாக கையாளும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.