எழுவர் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது நியாயமில்லை!


 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று மருத்துவர் ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


“பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் மேலும் ஒரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது.


உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. கடந்த ஜனவரி 20ஆம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த வி‌ஷயத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.


அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட மத்திய அரசு, 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது ஆளுனரே முடிவெடுக்கலாம்; அடுத்த 4 நாட்களுக்குள் இதுபற்றி ஆளுனர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தது. அதற்கு அடுத்த நாள் பேரறிவாளன் தரப்பின் கோரிக்கைப்படி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.


உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25ஆம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்; உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28ஆம் தேதிக்குள் ஆளுனர் தீர்மானித்திருக்க வேண்டும்.


ஆனால், கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை; அதற்கான காரணத்தையும் ஆளுனர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும். பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் இவ்வளவு கால தாமதம் தேவையில்லை.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுனர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. 7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக ஆளுனர் செயல்பட வேண்டும்.


30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி, தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை இழந்து விட்ட 7 தமிழர்களின் விடுதலையை இனியும் தாமதிப்பது சரியல்ல. எனவே, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.