பிரான்சில் இடம்பெற்ற “தமிழின விடுதலைப் பற்றாளர்” கிருபை நடராசா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு!📸

 


பிரான்சு சார்சல் மாநகரத்தில் வாழ்ந்து கடந்த 13.02.2021 சாவடைந்த யாழ்ப்பாணம் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி ( கிருபை நடராசா) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பாரிசின் புறநகர்ப் பகுதியான வில்தனுஸ் இல் இன்று (23.02.2021) செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

அமரர் கிருபானந்தமூர்த்தி அவர்கள் தமிழீழ தாயகத்தில் தமிழின அழிப்பு உச்சம் பெற்ற காலத்திலிருந்தும் தான் சாவடையும் 70 ஆவது வயதுவரை தேச விடுதலைக்காகவும், தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி நடைபெறும் அனைத்துப் போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மட்டுமல்லாது தமிழர்களின் நீண்ட கால உண்மைவரலாற்றைச் சொன்னதொரு பற்றாளனாக இருந்ததோடு மட்டுமல்ல சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தூதரகங்களுக்கு முன்பாக சிங்கள மொழியில் சொல்லிப் புரியவைத்ததொரு தமிழ் மகனாக இருந்து வந்துள்ளார். இவரின் இழப்பானது எத்தனை தமிழர்கள் மனங்களில் வேதனையைத் தந்துள்ளது என்பதை அவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மக்களின், உணர்வாளர்களின் கண்ணீர் உரைகள் தெரியப்படுத்தியிருந்தன.
இறுதிவணக்க நிகழ்வில் அவர் உறுப்பினராக இருந்த புங்குடுதீவு ஒன்றியம் மலர் வளையம் வைத்து தமது இரங்கலைத் தெரிவித்திருந்தனர். பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் இவர் அங்கம் வகித்த மூதாளர் இல்லம் உள்ளிட்ட பலர் தமது உணர்வுகளைப் பகிர்ந்திருந்தனர். அவர் பற்றிய நினைவுரைகளைப் பலர் ஆற்றியிருந்தனர்.
தமிழீழ விடுதலையை தான் சாகும் வரை நெஞ்சில் சுமந்து வாழ்ந்து பெருமைப்படுத்திய தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (கிருபை நடராசா) அவர்கள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் இவரின் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் பற்றி வாசிக்கப்பட்டு ”தமிழின விடுதலைப் பற்றாளர்” என்ற மதிப்பளித்தலினை வழங்கியிருந்தனர். அவரின் புகழுடல் மீது செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. தேசவிடுதலைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் இப்பற்றாளனுக்கு தமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து வணக்க நிகழ்வின்முடிவில் தமிழீழத் தேசியக்கொடியினை “தமிழின விடுதலைப் பற்றாளர்” கிருபை நடராசா அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தினர் மத்தியில் அவரின் துணைவியாரின் கைகளில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.மகேசு அவர்களால் கையளிக்கப்பட்டது.
நிறைவாக குடும்பத்தினர் மற்றும் உறவுகளின் கண்ணீர்க் காணிக்கையோடு ஆன்னாரின் புகழுடல் தீயுடன் சங்கமமானது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.