அதிமுக- அமமுக இணைக்கச் சொல்கிறாரா சசிகலா?

 


ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுதும் அமமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் (பிப்ரவரி 24) காலை சசிகலாவின் இல்லத்துக்குச் சென்றார். அங்கே சசிகலா தனது குடும்பத்தினர் மற்றும் அமமுக கட்சி நிர்வாகிகளுடன் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின் உடனே அமமுக அலுவலகம் திரும்பிய தினகரன், அங்கேயும் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தினகரன் அம்மாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற பேச்சுக்கு விளக்கம் அளித்தார்.

“அம்மாவுடைய தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்து ஆட்சியமைக்க வேண்டும் என்றுதான் சசிகலா குறிப்பிட்டார். அவர் அதிமுகவை சொல்கிறாரா, அல்லது அமமுகவை சொல்கிறாரா என்பதை சசிகலாவிடம்தான் கேட்க வேண்டும். நான் புரிந்துகொண்டது அம்மாவின் தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். வரும் தேர்தலில் அமமுக தலைமையில் கூட்டணி உருவாகும். அதுதான் முதல் அணியாக இருக்கும்” என்று கூறினார்.

சசிகலா தன் பேச்சில் அதிமுக என்றோ, அமமுக என்றோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையில் சென்னை தி.நகர் இல்லத்தில் தங்கியிருக்கும் சசிகலாவை இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் சசிகலாவின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிவித்தார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.