கலாச்சார மண்டபத்தை படையினரிடம் கையளிக்குமாறு கடிதம்!


யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான நிலத்தில் இந்திய அரசினால் 100 கோடி இந்திய ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் கலாசார மண்டபத்தை படையினரிடம் கையளிக்கும்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.

இக்கடிதம் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.ரி.கொடிகாரவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டிடத்தினை பராமரிப்பதற்கு சில துறைசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், பொறியிலாளர்கள் உட்பட 60 வரையான பணியாளர்கள் தேவைப்படுவதோடு இந்த பணித் தொகுதிக்கு கட்டிடத்தை அமைத்த இந்தியக் குழுவால் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் புதிய ஆளணியை நியமித்து அவர்களிற்கு பயிற்சி அளிக்கும் ஏற்பாட்டிற்கான காரணங்களால் அதிக காலதாமதம் ஏற்படலாம் எனவும் , அதுவரை கொழும்பு தாமரைத் தடாகத்தை நிர்வகிக்கும் படையினரிடம் கையளிக்குமாரும், படையினர் இந்தியக் குழுவினரிடம் பயிற்சியை பெற்றுக்கொள்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் மாநகர சபைக்கான நிரந்தர ஆளணி நியமிக்கும்போது அவர்களிற்கான பயிற்சியை படையினர் வழங்குவர் என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.ரி.கொடிகாரவினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2021-01-26 ஆம் திகதிய கடிதம் மூலம் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சாழ அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தின் பிரதி பிரதமரின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், மாநகர முதல்வர், மாவட்டச் செயலாளர், மாநகர ஆணையாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.