யாழ். பல்கலை மருத்துவ பீடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பு!


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் ஒன்றைக் கையளித்துள்ளார்.

யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த பி. சி. ஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் பி. சி. ஆர் இயந்திரத்தைக் கையளித்தார்.

நிகழ்வில், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதிஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஶ்ரீபவானந்தராஜா, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர்கள், பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். தற்போதைய கொரோனாப் பெரும் தொற்று நிலமைகளைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கமைய குறைந்தளவானவர்களுடனேயே நிகழ்வு இடம்பெற்றது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஆரம்பித்த காலத்தில் வடக்கில் கொரோனாத் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான வசதிகள் இல்லாத நிலையில், இங்கிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை அனுராதபுரம் மற்றும் தென்னிலங்கையில் அமைந்திருக்கும் பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி முடிவுகளைப் பெற வேண்டி இருந்தது. இதனால் முடிவுகளைப் பெறுவதில் பெரும் அசௌகரியங்கள் காணப்பட்டதுடன், தாமதமும் ஏற்பட்டது.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் தன்னிடமிருந்த ஒரேயொரு பி. சி. ஆர் இயந்திரத்தைக் கொண்டு, கடந்த வருடம் ஏப்ரல் மாதமளவில்பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.

இதனால் வடக்கில் பெறப்பட்ட மாதிரிகளை இங்கேயே பரிசோதித்து, முடிவுகளை விரைவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதன் பின்னரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வு கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள இரண்டு பி. சி. ஆர் இயந்திரங்களைக் கொண்டு நாளொன்றுக்கு சராசரியாக 300 மாதிரிகளைப் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.