யாழ். வைத்தியசாலை வீதியால் வெளிமாவட்டப் பேருந்துகள் செல்லத் தடை!


வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் நகர் வந்துசெல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளி மாவட்டங்களுக்குச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்துத் தரிப்பிடத்திற்குச் செல்ல வேண்டும்.

புதிய பேருந்துத் தரிப்பிடத்தை, இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் பயன்படுத்த மறுத்துவரும் நிலையில் யாழ். மாநகர சபையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து, யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனை மீறுபவர்கள் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் வைத்தியசாலை வீதியைப் பயன்படுத்துவது தடை செய்யப்படும் பட்சத்தில் யாழ். நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவடையும். எனவே, அனைவரதும் ஒத்துழைப்பை இதுதொடர்பாக வேண்டி நிற்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.