முல்லைத்தீவில் மணல் மாபியாக்கள் அட்டூழியம்!


முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம், உப்புமாவெளிப் பகுதியில் கடற்கரையோர மணல் திட்டுக்கள் தொடர்ச்சியாக அகழப்படுவதால் வெள்ளப்பெருக்கு மற்றும், கடல் நீர் கரையோரப்பகுதிகளுக்குள் உட்புகும் அபாய நிலை காணப்படுவதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், மணல் ஏற்றிச் செல்லப்படும் வீதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இது தொடர்பில் மணல் அகழ்வுச் செயற்பாட்டை நிறுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை குறித்த மணல் அகழ்வுச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டுமென கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ச்சியாக இந்த மணல் அகழ்வுச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த மணல் அகழ்வு விவகாரத்தினை உடனடியாகத் தடுக்கும் வகையில் அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை செயற்படுத்துவதற்கான ஒழுங்குகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை மணல் கொள்ளி தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை அங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அவ்வீதியால் உழவியந்திரத்தில் மணல் கடத்தி ஏற்றிவந்தவர் ஊடகவியலாளருடைய அடையாள அட்டையை கேட்டு அச்சுறுத்தி அவரை வீடியோ எடுத்ததுடன், அவரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.