தடைகளையும் மீறி மட்டக்களப்பை வந்தடைந்தது பேரணி!


பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது.

வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டம் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தின்போது தடையுத்தரவு பெறப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை அடையாளப்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

அத்தோடு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற தடையுத்தரவினை காண்பித்து ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டபோது அத்தனையும் மீறி போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவிலில் இருந்து தாழங்குடா வரையில் சுமார் 100 கிலோமீற்றர் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பினை வந்தடைந்த குறித்த போராட்டத்திற்கு அட்டாளைச் சேனையில் முஸ்லிம்களும் இணைந்து வலுச்சேர்ந்தனர்.

இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு அனைத்து விதமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் முகமாகவும் அகிம்சை முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.