குடும்பத் தலைவரை வெட்டிவிட்டு நள்ளிரவில் இடம்பெற்ற கொள்ளை!


யாழ்ப்பாணத்தில், வீடு புகுந்து குடும்பத் தலைவரை வெட்டிவிட்டுக் கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் செபஸ்தியான் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், கோண்டாவிலைச் சேர்ந்த மூவர் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்யப்பட்டனர்.

இதுகுறித்து பொலிஸார் தெரிவிக்கையில், “வீடு புகுந்த கும்பல், வாள் மற்றும் கத்தியால் குடும்பத் தலைவரை வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு, ஆறு தங்கப் பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்டுத் தப்பித்தது.

கோப்பாய் வைத்தியசாலையில் கடமையாற்றுபவரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கொள்ளைக் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, தடயங்களின் அடிப்படையில் கோண்டாவிலைச் சேர்ந்த மூவர் இன்று கைதுசெய்யப்பட்டனர். 40, 30 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரதான சந்தேகநபரிடமிருந்து இரண்டு கிராம், 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடி, வாள் மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன” என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.