நுவரெலியாவில் சம்பள விவகார போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு!


பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பணிபகிஷ்கரிப்பை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முயற்சித்த பொழுதும் கடந்த பேச்சுவார்த்தையின்போது 200 ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே பெற முடிந்தது.

இன்று இ.தொ.கா.வின் பொதுசெயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்.

அதன் ஆரம்பகட்டமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் சம்பள நிர்ணய சபைக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னோடி ஏற்பாடான நாளை,அமைதியான ஒரு நாள் பணிபகிஷ்கரிப்பை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கைகோர்க்க வேண்டும்.

அந்தவகையில் குறித்த பணிபகிஷ்கரிப்புக்கு அனைத்து தோட்ட தொழிலாளர்களும் மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், ஆசிரிய தொழிற்சங்கங்கள், இளைஞர்கள், நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பொது மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.