ஒருபுறம் கொண்டாட்டம் மறுபுறம் போராட்டம்!
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஒருபுறம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் குறித்த நாளை கரிநாளாக வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனுஷ்டித்து கறுப்பு பட்டிபோராட்டம் நடத்துகின்றனர்.
நாடளாவிய ரீதியில் சுதந்திர தின நிகழ்வுகள் அரசாங்கத்தினால் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் பெரும்பான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில், அவர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியினை ஏற்றி, சுதந்திர தினத்தை முழுமையாக பெற்றுள்ளோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் மக்கள், ஆங்கிலேயரிடம் இருந்தே இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் எமக்கு இன்னும் ழுழுமையாக எந்ததொரு சமவுரிமையும் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் கரிநாளாக கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது வடக்கு- கிழக்கில் இதுவரை காலமும் இல்லாதளவுக்கு தமிழ் மக்கள் அனைவரும் பிளவுகளை மறந்து ஒன்றிணைந்து, 73ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து 11வருடங்கள் கடந்தபோதிலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, நிலப்பிரச்சினை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், அடிப்படை பிரச்சினை என எவைகளுக்கும் இதுவரை காலமும் எந்ததொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
மேலும் யுத்தத்திற்கு முன்னர், அதற்கு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது, அவர்கள் உயிருடன்தான் இருக்கின்றார்கள் என்ற உண்மையை கண்டறியும் பொருட்டு, யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு தனது பிள்ளைகளை தேடி பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து போராடிய பல தந்தைகள் மற்றும் தாய்மார்கள் போராட்டுத் தளத்திலேயே உயிர்நீத்த சம்பவங்கள் பதிவாகி கொண்டுதான் இருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு நீதி பெற்றுத்தருவதாக உறுதியளித்து, அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்கே அதிகளவான அரசியல் தலைமைகள் முனைவதனையும் இங்கு காணக்கூடியதாக உள்ளன.
மேலும் மாறி மாறி வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கி, அவர்களை தொடர்ச்சியாக ஏமாற்றிச் சென்றதாகவே வரலாறு.
இவ்வாறு 11 வருடங்களாக உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்மக்கள், சர்வதேசத்தின் ஊடாகவே தமக்கு நீதிக்கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால் சர்வதேசமும் அவர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.
அத்துடன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கி ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்த்தினர். அவரும் ஏமாற்றியது மாத்திரமே மீதம்.
மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அனைத்து விடயங்களுக்கும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஆதரவினை வழங்கினர்.
ஆனால் அந்த நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களின் விடயங்களில் கண்துடைப்பான விடயங்களை மேற்கொண்டது.
இந்நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு கோட்டபாய ராஜபக்ஷ, நாட்டின் தலைவராக பதவியேற்றார். அவர் பௌத்த நாடு என்ற கோட்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தே ஆட்சி செய்து வருகின்றார்.
மேலும் அவர் ஜனாதிபதியாக பதவியேற்று சிறிது காலத்திலேயே, தமிழ் மக்கள் நீண்டகாலமாக காணாமல் போயுள்ள உறவுகளை தேடி நடத்திவருகின்ற அப்போராட்டத்தை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவ்வாறு எவரும் இல்லை என அறிவித்தார்.
இத்தகைய ஜனாதிபதியின் கருத்து தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்பு கூறலில் இருந்தும் விலகுவதாக அரசாங்கம் அறிவித்தது.
அதேபோன்று தமிழர் பகுதிகளில் பெரும்பான்மையினரை தொடர்ச்சியாக குடியேற்றுதல், விகாரைகளை அமைத்தல் என தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தற்போது தலைத்தூக்க ஆரம்பித்துள்ளன.
இது நாட்டில் நல்லிணக்கத்துக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக மாறி வருகின்றது.
அதேபோன்று இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை அவதானித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரும் இலங்கை தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தமிழர்களுக்கான தீர்வு கிடைப்பதற்கு சாதகமான சமிக்சைகள் தென்படுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையிலேயே வடக்கு- கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுதந்திரத் தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து கறுப்புப் பட்டி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
அந்தவகையில் அவர்களின் இந்த போராட்டதை வலுசேர்க்கும் வகையில் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புக்களும் பொதுமக்களும் என அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.
இவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தி சென்று கொண்டிருக்கின்றார்கள்.
அந்தவகையில் குறித்த போராட்டம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு என அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.
தமிழனாக பிறந்தால் மட்டும் போதாது கொஞ்சமாவது தமிழ் உணர்வுடன் வாழவேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்தும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து விலகாத வகையில் ஒரு பொறிமுறையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வகுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு இம்முறை இலங்கையில் சுதந்திரத் தினம், ஒரு சமூகத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் கரிநாளாக வடக்கு- கிழக்கிலுள்ள அனுஷ்டிக்கப்பட்டு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்தவகையில் பல்லின மக்கள் வாழும் இலங்கையில் ஒரு இனத்தையோ மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஏனைய இன மதங்கள் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் புதிய புதிய பிரச்சினைகள் தோற்றம் பெறுமேயன்றி நல்லிணக்கமான ஒற்றுமையான சமுதாயம் உருவாவதற்கு வாய்ப்பில்லை.
ஆகவே இவ்விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் தலைவர் உள்ளிட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சிந்தித்து செயற்பட்டால்தான் இலங்கையின் எதிர்கால பயணம் சுபீட்சத்தை நோக்கியதாக அமையும் என்பது திண்ணம்.
கருத்துகள் இல்லை