விரைவில் மக்கள் சந்திப்புடன் தீவிர அரசியல்!


சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் இருந்து விடுதலை பெற்று தமிழகத்திற்குத் திரும்பியுள்ள அ.தி.மு.க.வின் இடைக்காலத் தலைவராக இருந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்துடன், விரைவில் மக்களைச் சந்திப்பேன் எனவும் மீண்டும் ஆட்சியில் அமர அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என்றும் வாணியம் பாடியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளேன். அ.தி.மு.க. அலுவலகத்துக்குச் செல்வீர்களா என நிறையப் பேர் கேட்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று.

தொண்டர்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு நெகிழ்ச்சி அடைகிறேன். தொண்டர்களின் அன்புக்கும் மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை.

புரட்சித்தலைவர் கூறியதைபோல, ‘அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கும் நான் அடிமை, கொண்ட கொள்கைக்கும் நான் அடிமை, தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் என்றுமே நான் அடிமை’.

அடக்கு முறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டது. அதன்பிறகு அதே அவசர கதியில் மூடப்பட்டது ஏன் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.

எனது வாகனத்தில் அ.தி.மு.க. கொடி பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் பொலிஸாரிடம் புகார் அளித்திருப்பது அவர்களது பயத்தைக் காட்டுகிறது.

அ.தி.மு.க.வைக் கைப்பற்றுவீர்களா என சிலர் கேட்கின்றனர். மிக விரைவில் செய்தியாளர்களையும் மக்களையும் நேரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள்.

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும். எத்தனையோ முறை சோதனைகளை அ.தி.மு.க. சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி.

புரட்சித்தலைவி ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். மீண்டும் ஆட்சியில் அமரக்கூடாது என ஒரு கூட்டம் தனியாகச் செயற்படுகிறது. அதை முறியடிக்க வேண்டும். மீண்டும் ஆட்சியில் அமர நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

வளர்க அ.தி.மு.க., புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, புரட்சித் தலைவி நாமம் வாழ்க’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.