சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

 


சுபீட்சமான எதிர்காலம் - சௌபாக்கியமான தாய் நாடு என்ற தொனிப் பொருளில் 73ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடுவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க தெரிவித்தார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிரதான நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. சுகாதார வழிமுறைகளை பேணி, சுதந்திர தினம் கொண்டாடப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க கூறினார்.

சுதந்திர தின நிகழ்வில் ஆயிரத்து 800 பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளார்கள். தேவை ஏற்படின், என்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு குழுவொன்று தயார்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் வளாகத்தில் நுழைவதற்கு முன்னர் உடல் வெப்பநிலை மதிப்பிடப்படும். சுதந்திர தினத்திற்கான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முப்படையினரும், பொலிஸாரும் முன்னெடுப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் கூறினார். முப்படையின் அடையாள அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேட்டுகளாக முப்படையினர் 21 வேட்டுகளை தீர்க்கவுள்ளனர். தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படையினர் காலி முகத்திடலில் முற்பகல் 11.30ற்கு 25 மரியாதை வேட்டுக்களை தீர்க்கவுள்ளனர்.

இதேவேளை, சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் காலை 7.15 மணிக்கு டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சகல அரச திணைக்களங்களிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன்சமய தலங்களிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.