இலங்கையில் ஊடகங்களைத் தணிக்கை செய்யும் திட்டம் இல்லை!


இலங்கையில் ஊடகங்களைத் தணிக்கை செய்யும் எந்த நடவடிக்கையும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களின் கட்டுப்பாடு மற்றும் தணிக்கை தொடர்பான கூற்றுக்கள் தவறானவை என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களிடம் தெரித்தார்.

இதேவேளை, செய்தி வெளியீடுகளில் ஒரு சார்பு அறிக்கை மற்றும் நியாயமற்ற விடயங்களுக்குத் தீர்வுகாண மட்டுமே விவாதங்கள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

ஊடகங்கள் மிக முக்கியமான துறை என்றும், ஊடக பணியாளர்கள் ஒரு நாட்டில் மிகுந்த நம்பிக்கையுடனும் மரியாதைக்குரியவர்களாகவும் உள்ளனர் என்று வெகுஜன ஊடக அமைச்சர் விளக்கினார்.

மேலும், ஊடகங்களில் தெரிவிக்கப்படுவதை மக்கள் நம்புகிறார்கள். எனவே, பொதுமக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஊடகங்கள் தொடர்பாக ஏதேனும் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டால், அது ஊடக ஊழியர்களைப் பாதுகாப்பதும், சில ஊடகங்கள் வழியாக பக்கச்சார்பான ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுப்பதுமாகவே அமையும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சார்பு அறிக்கையிடலில் கவனம் செலுத்தும் ஊடக நிறுவனங்கள் தங்களது சொந்தப் பார்வைகள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, தற்போது சில ஊடகங்கள் குறித்து பொதுமக்களிடத்தில் மிகவும் மோசமான கருத்து உள்ளது எனவும், இதைச் சரிசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், ஊடகங்கள் மீது மரியாதை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், வழிப்படுத்துவதற்கும் ஒரு திட்டத்தை வகுப்பதற்கு விவாதங்கள் நடந்து வருகின்றன எனவும் இந்த நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது ஊடக அமைச்சின் பொறுப்பாகும் என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் தங்கள் குற்றச்சாட்டுகளுக்குக் குரல் கொடுக்கவும், நீதி தேடவும் நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.