சபாநாயகரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!!

 


உலகளாவிய ரீதியில் கொவிட் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளபோதும் நாம் இலங்கைத் தேசமாக ஐக்கியத்துடன், ஒன்றுபட்ட மனதுடன் வளமான தேசமாக முன்னேற வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் 73 ஆவது தேசிய சுதந்திர தினத்தைப் பெருமையுடன் கொண்டாட மீண்டும் ஒன்றிணைந்துள்ளோம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர், “1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றபோது இந்நாட்டிலிருந்த சகல இனத்தவர்களும் ஒன்றிணைந்து, ஐக்கியத்துடன் செயற்பட்டமை அசைக்க முடியாத பலமாக இருந்தது.

இனம், மதம், குலம், நிறம், வகுப்பு மற்றும் கட்சி போன்ற குறுகிய வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்படாமையால் அன்று இலங்கையர்களின் மனங்களிலும் இதயங்களிலும் சுதந்திரம் குறித்த எண்ணம் வலுவாக இருந்தது.

அன்று சுதந்திரம் பெற்ற இலங்கைத்தாயும் அதன் பிள்ளைகளும் இன்றுவரை வந்துள்ள பயணம் இலகுவானதல்ல.

கடந்த காலத்திலிருந்து எதிரிகளின் அச்சுறுத்தல், நோய் பயம் உள்ளிட்ட சகல அச்சுறுத்தல்களின் மத்தியிலும் இந்த நீண்ட பயணத்தில் உயிரைப் பாதுகாப்பதற்கு அன்புக்குரிய பிள்ளைகள் பின்னிற்கவில்லை. எனவே இந்த வருட சுதந்திர தினத்தைப் பெருமையுடனும் மரியாதையுடனும் கொண்டாடுகின்றோம்.

விசேடமாக, உலகம் முழுவதும் உள்ள நாடுகள் முகங்கொடுத்துள்ள கொவிட் சவாலின் மத்தியில் தமது சொந்த சுதந்திரம் மற்றும் வாழ்க்கையைப் பொருட்படுத்தாது இன்று எமது தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காக ஈடுபட்டுள்ள சகல சுகாதார சேவைப் பணியாளர்களுக்கும் முப்படையினருக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் மரியாதையை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கின்றோம்.

அத்துடன் பயங்ரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானத்தின் விடியலில் அபிவிருத்தியை நோக்கி இலங்கை நகர்ந்துவரும் சூழலில் மனித உரிமை மீறப்பட்டதாக சர்வதேச ரீதியில் முன்வைக்கப்படும் அபத்தமான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கு நாம் அனைவரும் இலங்கைத் தேசத்தவர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்தல்களின் மூலம் ஆசியாவில் நீண்டகாலம் ஜனநாயகம் கொண்ட நாடு என்ற அடையாளத்தைக் கொண்டுள்ள நாம், இலங்கை பாராளுமன்றத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வோம். இதுபோன்ற ஜனநாயக நிறுவுனக் கட்டமைப்புக்களாலேயே எந்தவொரு நாட்டின் எதிர்காலத் திசையும் தீர்மானிக்கப்படுகின்றன.

‘வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு’ என்ற தொனிப்பொருளில் இவ்வருட சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட அனைத்து இலங்கையர்களும் குறுகிய வேறுபாடுகளை மறந்து நிலையான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

எனவே, இந்த மகத்தான சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த வளம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்ப இப்பெருமை மிக்க தருணத்தில் உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.