ஏமாற்றப்படும் இந்திய புகலிடக் கோரிக்கையாளர்கள்!


 கனடாவில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவதாக வாக்களிக்கும் ஒரு கூட்டம், இலவச சேவைகளுக்கு கூட பணம் பெற்றுக்கொண்டு இந்திய புகலிடக் கோரிக்கையாளர்களை ஏமாற்றுவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மொன்றியல் சமூக சேவகியான Anne-Marie Bellemareஐ, கடந்த 18 மாதங்களாக, தொடர்ந்து பல இந்திய புகலிடக்கோரிக்கையாளர்கள் சந்தித்து தங்கள் பிரச்சினைகளை தெரிவித்துள்ளார்கள்.

எளிதாக கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக இந்தியர்களிடம் வாக்களிக்கும் சிலர், அதற்காக பெருந்தொகை ஒன்றை பெற்றுக்கொண்டு அவர்களை கனடாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு குழந்தையை மட்டும் இந்தியாவில் விட்டு வந்துவிட்டால் விசா பிரச்சினை இருக்காது என்றும், விரைவில் குடும்பத்துடன் இணைந்துவிடலாம் என்றும் வாக்களிக்கிறார்களாம் இந்த மோசடியாளர்கள்.

ஆனால், அவர்கள் குழந்தையை விட்டுவிட்டு கனடா வந்தபிறகு, அவர்களுக்கு எந்த தகவலும் கொடுக்கப்படுவதில்லையாம். அப்படி மோசடியில் சிக்கிய விவசாயி ஒருவர், தனது நிலம் அனைத்தையும் விற்றுவிட்டு கனடா கனவுகளுடன் 20,000 டொலர்கள் கட்டணம் செலுத்தி கனடாவுக்கு வந்திருக்கிறார்.

இதேவேளை இன்னொரு பக்கம், Dr. Juan Carlos Chirgwin என்ற மருத்துவர் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

அவரிடம் வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், மொன்றியலில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தியது குறித்த கதைகளை பகிர்ந்துகொள்கிறார்களாம்.

அதுவும், பணி உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காக அவர்கள் இந்த மருத்துவர்களை அணுகும்போது, இலவச சேவைகளுக்கு, ஏராளம் பணம் பெற்று அவர்களை அந்த மருத்துவர்கள் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக Juan தெரிவிக்கிறார் .

இப்படி கனடா வரும் பலருக்கு, சட்ட உதவி இலவசம் என்பதும், புகலிடக்கோரிக்கையாளர்கள் செட்டில் ஆக உதவுவதற்காக அரசு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள PRAIDA என்ற அமைப்பு உள்ளது என்பது குறித்த விடயமும் தெரியவில்லை என்கிறார் அவர்.

PRAIDA அமைப்பு ஏராளமான சேவைகளை இலவசமாகவே வழங்குகிறது. ஆனால், அது தெரியாத புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், பெருந்தொகைகளை செலுத்தி ஏமாந்து வருகிறார்கள், அது சட்டவிரோதம் எனவும் Juan கூறுகிறார் .

இதேவேளை பிள்ளைகளை விட்டு விட்டு கனடாவுக்கு வரும் பலர், மன அழுத்தத்துக்கும் தற்கொலை எண்ணங்களுக்கும் ஆளாகிறார்கள் என Juanம் சமூக சேவகியான Anne-Marieயும் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக, கனடாவில் முதல் புகலிடக்கோரிக்கை தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கே குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். மேல் முறையீடு செய்யவேண்டுமென்றாலோ பல ஆண்டுகள் பிடிக்கும்.

ஆனால், இது தெரியாமல் சொத்தை விற்று ஏராளம் பணத்தை செலுத்திவிட்டு பலர் கனடாவில் வந்து என்ன செய்வதென தெரியாமல் பல ஆண்டுகளாக விழித்துக்கொண்டிருக்கிறார்கள்..

20,000 டொலர்கள் செலுத்திவிட்டு கனடா வந்த அந்த விவசாயி, தானும் தன் குடும்பமும் கனடாவுக்கு வரமுடிந்ததற்காக தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவிக்கிறார். ஆனால், கனடாவிலேயே அவர்களால் தொடர்ந்து வாழ முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.