சீமான் விடுத்துள்ள கோரிக்கை!


 தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுத்து, இனத்திற்கான கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழரான அம்மையார் அம்பிகை அவர்கள், இலங்கையை இனப்படுகொலை குற்றத்திலிருந்து காப்பாற்றும் வகையில், ஆதரவான தீர்மானம் கொண்டுவருவதைப் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கைவிட்டு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்தி விசாரிக்கும் வகையில் தீர்மானம் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தி, சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதை அறிகிறேன்.நீதிக்கான அவரது அறப்போராட்டம் வெல்ல வேண்டும்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக இனப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடும் தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தைப் புரியும் வகையில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இனப்படுகொலை செய்த இலங்கையைக் காப்பாற்ற மீண்டும் உள்நாட்டிலேயே நீதி விசாரணையைச் செய்து கொள்ளலாம் என்று பிரிட்டன் தலைமையிலான உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவரவுள்ள செய்தி உலகத் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறத்தின் பக்கம் நின்று நீதியைப் பெற்றுத்தரவேண்டிய நாடுகள், இனப்படுகொலை குற்றவாளிகளையே விசாரிக்கக் கோருவது எவ்வகையில் நியாயமாகும்?

ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளில் இலங்கை பேரினவாத அரசிடம் உள்நாட்டு விசாரணை ஒப்படைக்கப்பட்டு அதில் அணுவளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதோடு, தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், இனவெறி தாக்குதல்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

மீண்டும் ராஜபக்ச அரசாங்கம் அமைந்தவுடன் சிங்கள பேரினவாத செயல்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன. இதை நன்கு உணர்ந்த பிறகே, இலங்கை அரசின் இனவெறிச் செயல்பாடுகளை மிக விரிவாகப் பட்டியலிட்டு இலங்கை மீது பன்னாட்டு நீதி விசாரணை நடத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று ஐநா மனித உரிமை பேரவையே கோரியிருந்தது.

ஐநா மனித உரிமை பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களும் இலங்கை மீதான உலக நாடுகள் பார்வை இனியாவது மாற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் அவற்றைப் புறந்தள்ளி மீண்டும் இலங்கைக்கு விசாரணைக் காலத்தை நீட்டித்துக் கொடுத்து, உள்நாட்டிலேயே விசாரணை நடத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கும் வகையில் உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவருவது தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை முற்று முழுதாக நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கையே ஆகும்.

இதனால் ஐநா மனித உரிமை பேரவை அறிக்கைக்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இனப்படுகொலைக்கு இனியாவது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த தமிழர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும், வேதனையையும் அடைந்துள்ளனர்.

தமிழினம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் தற்காலச் சூழலில், அம்மையார் அம்பிகை முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக மிக நியாயமானவை என்பதை உலகத்தமிழினம் நன்கு உணரும்.

அவரது அறப்போராட்டம் வெல்ல வேண்டும் என்பதே நம் அனைவருடைய விருப்பம்.

தனியொரு பெண்மணியாகத் தீரத்துடன் அம்மையார் முன்னெடுத்துள்ள போராட்டத்தை எண்ணி உள்ளம் பெருமிதம் கொண்டாலும், அதேசமயம் கடந்தகாலக் கசப்பான அனுபவங்கள் கற்றுத்தந்த பாடங்கள் இப்படியொரு கடினமான முடிவை அம்மையார் எடுத்திருக்க வேண்டாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இதைப்போன்றதொரு அறப்போராட்டத்தில்தான் அண்ணன் திலீபனையும், அன்னை பூபதி அவர்களையும் நாம் இழந்தோம்.

ஆகவே அம்பிகை அம்மையார் தம்முடைய போராட்ட வடிவத்தை மாற்றவேண்டும் என்று அன்போடு கோருகிறேன்.

இனப்படுகொலைக்கு நீதியைப் பெறவேண்டும் என்ற நோக்கில் தனிமனிதராக அம்மையார் அம்பிகை முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுத்து, இனத்திற்கான கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.