விஷம் கலந்த ஐஸ் கிரீமை சாப்பிட்ட குழந்தைகள் பலி!

 


கேரளாவில் ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதற்காக ஐஸ் கிரீமில் விஷம் கலந்து வைத்திருந்தது தெரியாமல், அதனை சாப்பிட்ட அவரது குழந்தையும் தங்கையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 11-ஆம் திகதி, கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள Kanhangad பகுதியைச் சேர்ந்த 25 வயதான வர்ஷா, ஒரு ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் அதை சிறிதளவு உட்கொண்டுள்ளார். பின்னர், சிறிது சங்கடமாக உணர்ந்த அவர் தனது அறைக்குச் சென்றுள்ளார்.

மீதமுள்ள விஷம் கொண்ட ஐஸ்கிரீமை மேசையில் வைத்துவிட்டு சென்ற நிலையில், அவருடைய மகன் அத்வைத் (5) மற்றும் சகோதரி த்ரிஷ்யா (19) அதனை தற்செயலாக உட்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு உணவகத்திலிருந்து பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

அன்று இரவு, அத்வைத் வாந்தியெடுக்க ஆரம்பித்தான். அவனது உடல்நிலை மோசமடைந்த நிலையில், ​​குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், பிப்ரவரி 12-ஆம் திகதி காலையில் குழந்தை இறந்துவிட்டான்.

அத்வைத் இறந்த பின்னர், த்ரிஷ்யாவும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், ஒரு வாரத்திற்கும் மேலாக தனது உயிருக்கு போராடிய பின்னர், த்ரிஷ்யாவும் பிப்ரவரி 24, புதன்கிழமை காலை இறந்தார்.

விஷம் கலந்த ஐஸ்கிரீமை உட்கொண்டபின் எந்தவிதமான அசௌகரியத்தையும் அவர் அனுபவிக்காததால், வர்ஷா தனது தற்கொலை முயற்சி குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.

பிரியாணியை உட்கொண்ட பிறகே அத்வைத் மற்றும் த்ரிஷ்யா நோய்வாய்ப்பட்டதாக குடும்பத்தினர் நினைத்தனர்.இந்த சம்பவம் குறித்து பிப்ரவரி 17-ஆம் தேதி வர்ஷாவின் உறவினர் சனோத் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், பிரியாணி சாப்பிட்ட அன்று வீட்டிலிருந்த வர்ஷாவை பொலிஸார் கைது செய்து விசாரித்த பொது நடந்த உண்மைகள் தெரியவந்துள்ளது.இந்நிலையில், வர்ஷா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 மற்றும் 305 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொள்ள நினைத்தவர உயிர்பிழைத்து, அந்த விஷத்தை அறியாமல் சாப்பிட்ட 5 வயது குழந்தை மற்றும் 19 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.