கொள்ளையிட்டவர்களை பிடித்து வெளுத்துவங்கிய இளைஞர்கள்!


 பொன்னாலை கலாசார மண்டபம் உடைக்கப்பட்டு 18 கதிரைகளைத் திருடிய குற்றச்சாட்டின்பேரில் மூவர் ஊர் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (02) மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.


மேற்படி கலாசார மண்டபம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டு கதிரைகள் திருடப்பட்டமை தொடர்பாக மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


இத்திருட்டு தொடர்பாக ஊர் இளைஞர்கள் உள்ளக விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர். இரு வீடுகளில் கதிரைகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து கிராம சேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

கிராம சேவையாளர் மற்றும் பொருளாதார அவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் நேரில் சென்று கதிரைகளை பார்வையிட்டனர்.


நபர் ஒருவர் விற்பனை செய்த கதிரைகளையே தாம் பணம் கொடுத்து வாங்கினர் எனவும் திருட்டு கதிரைகள் என தமக்கு தெரியாது எனவும் கதிரைகளை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.
எனினும், கதிரை இருந்த வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களைத் தொடர்ந்து அங்கிருந்த இளைஞர் ஒருவரும் திருட்டுக்களுடன் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டார்.


பின்னர் கதிரைகளை திருடியவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் உரியவாறு கவனிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் ஒருவர் இவ்வாறு பிடிக்கப்பட்டார். 13 கதிரைகளும் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யவேண்டாம் எனவும் அரச சொத்து திருடியமை தொடர்பாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஊர் இளைஞர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரைக் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.