ஐ.நா.வின் முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது- சி.வி!!

 


இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வரைபையிட்டு, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


இவ்வார கேள்வி பதிலில், ஜெனீவா தூதுக் குழுக்களிடையே இலங்கை சம்பந்தமாக கையளிக்கப்பட்ட ‘சீரோ’ வரைபு குறித்து ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் தெரிவிக்கையில், “குறித்த முதல் வரைபானது குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது. அதுவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் காரியாலயத்தினதும் உயர்ஸ்தானிகர் பச்சலெட் அவர்களினதும் சிபாரிசுகளுக்குக் குறைவாகக் குறித்த வரைவு காணப்படுவது மிகவும் மன வேதனை அளிக்கின்றது.


குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படிநிலைக்குக்கூட குறைவாக இருக்கின்றது. அந்தத் தீர்மானமும் அதனுடைய குறைபாடுகளால்தான் தோல்வியடைந்தது.


தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதுமான குறிக்கோள்கள் சம்பந்தமாகப் பார்க்கும்போது இவ்வாறான ஒரு வரைபு இலங்கை அரசாங்கத்திற்கு முரணான ஒரு கருத்தைக் கொண்டு செல்வதாக அமைகின்றது. தாமதம் அடையும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். ஏற்கனவே, ஆறு வருடங்கள் சென்றுவிட்டன. இலங்கை அரசாங்கம், தான் செய்வதாகக் கூறியவற்றில் எதனையும் மனமுவந்து செய்யவில்லை.


இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உள்ளகக் குழுவானது வெகுஜன கொலையாளிகளையும் கற்பழிப்பாளர்களையும் பாதுகாக்கும் வண்ணம் இவ்வாறான ஒரு வரைபைத் தயாரித்தமை மன வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இலங்கை அரசாங்கத் தலைவர்கள் இதுகண்டு விருந்துகளிலும் களியாட்டங்களிலும் ஈடுபடுவார்கள்.


இவ்வாறான வரைபானது போர்க் குற்றங்களையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும் இனப் படுகொலைகளையும் எந்தவிதப் பயமும் இன்றி இயற்றலாம் என்ற ஒரு கருத்தை உலகளாவிய அரசாங்கங்களுக்குக் கொடுப்பதாக அமையும். மனித உரிமைகள் சம்பந்தமாகவும் அடிப்படை நன்னடத்தை சம்பந்தமாகவும் கவனம் செலுத்தும் யாவருக்கும் இவ்வாறான ஒரு வரைபு மன வேதனையை அளிக்கும்.


பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறான வரைவுகள் ஐக்கிய நாடுகளின் வருங்காலத்திற்கு நன்மை பயக்காது என்பதை நாம் உணர வேண்டும்.


அதேநேரம், இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் நடைபெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி, தமிழ் மக்களிடையே மதிப்பு மிக்க அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதில் புது வேகத்தையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்தியுள்ளதைக் காண்கிறோம்.


புதியதொரு தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் அவர்களுடைய பாதுகாப்பையும் நலவுரித்துக்களையும் அவர்களின் வருங்கால எதிர்பார்ப்புக்களையும் காப்பாற்றுவதாக அமைய வேண்டும். தமிழ் தலைவர்கள் என்று கூறுவோர் சிலர் உறுப்பு நாடுகளிடம் சென்று எங்கள் பிரச்சினைகளைக் குறைத்துக் கூறினார்களோ தெரியவில்லை.


இலங்கை பற்றிய நடவடிக்கையானது இன்று ஐ.நா. பேரவையை ஒரு தராசில் தடுமாறிக் கொண்டிருக்க வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.