சொக்லேற் கனவுகள் -23!!

 


முட்கிழுவைகள்

வரிசைகட்டி நின்றன,

ஆங்காங்கே முள்முருங்கை,

ஒருபக்கம் கிளிசறியா,


இடைவேலி பூவரசு,

அதனோடு சேர்ந்திருந்து

வேலியை நெருக்கமாக்க

கள்ளிச் செடி.....


இத்தனைநாள் தெரியாத

வேலியின் அழகெல்லாம்

இன்றுதான் தெரிந்தது,

அனுதியின் கண்ணுக்கு....


'காதலென்பது

அழகான பிதற்றலென'

யாரோ சொன்னதாய்

நினைவினில் உதித்தது....


அருகிலே சேர்ந்துவந்த

ஆதித்தனின் கைபற்றி,

பேச ஏதும் தோன்றாது

மௌனமாய் நின்றாள். 


விழிமூடி நின்றவளின்

மோனத்தைக் கலைக்காது

தன்னவளை ரசித்தபடி

தானும் மௌனித்தான். 


தென்னையும் வாழையும்

சேர்ந்தே நின்றிருக்க,

'வாழையில் நீரெடுத்தும்

தென்னை செழிக்கும்'

என்பார் தாத்தா.....


தானும் அப்படித்தான்

தங்கி வாழும் ஜீவனென

தனக்குள்ளே நினைத்தபடி

நடந்தாள் அனுதி. 


'அடடே...

என்னதிது அதிசயமா,

ஆதியோடு..அனுதி

சேர்ந்தபடி......?'

பொக்கை வாய்திறந்து

பாட்டி குரல்கொடுக்க,

'எங்கே....எங்கே.....?'

எட்டிப் பார்த்தார் தாத்தா.


இவர்களைத் தொடர்ந்தே

அடுத்தடுத்த ஜோடிகளும்

இணைந்தே வந்துவிட

பாட்டிவீடு கலகலத்தது. 


சினேகமும் சீராட்டலும்

சேர்ந்திருக்கும் இல்லத்தில்

சிரிப்பிற்கும் களிப்பிற்கும்

பஞ்சமும்தான் வந்திடுமா?


பெற்றவர்கள் அருகிருக்க,

பெரியவர்கள் சேர்ந்திருக்க

மைத்துனியின் கரம்பற்றி,

மகிழ்வோடு சிரித்த ஆதி,


'அத்தை....மாமா.....

எனக்காக....

என் சந்தோஷத்திற்காக

நீங்கள் தந்த பரிசு

அனுதி......'


'நான் வாழுற வரைக்கும்

சந்தோசமா வாழ

உங்கள் மகள்

எப்பவும் என்னோடு வேணும்....'


'அவள் வாடாமல்,

அவள் நோகாமல்,

அவள் சநதோசங்கள்

ஒருபோதும் சிதறாமல்,

நான் பாத்துக்கொள்வேன்....'


'உங்கள் மகளை,

இந்தக் குடும்பத்தின்

இளவரசியை

நான் மணந்துகொள்ளவா?'

என்றான்....


அனைவரது கண்களும்

அனுதியில் படிந்தது. 

வெட்கத்தில் சிவந்த 

வதனத்தை

மைத்துனன் முதுகின்பின் 

மறைத்துக்கொண்டாள்

அவள். 


கனவுகள் தொடரும்

கோபிகை.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.