மின்னல் விழுந்து எரிந்தபோது என்ன நிலையோ..!

 


கூடுவிட்டு விலத்திய தன்குஞ்சை

கொத்திச்செல்ல வந்த பருந்திடம்
கொக்கரித்து போராடிக்
குஞ்சைக்காப்பாற்ற நினைக்கும்
ஓர் தாய்க்கோழியின் தவிப்பில்


உன்னைத்தேடி துடிக்கிறேன்
சின்ன சின்ன குச்சி வைத்து
கண்ணும் கருத்துமாய்
கூடுகட்டி முட்டையிட்ட
கரிக்குருவியின் கூட்டில்
மின்னல் விழுந்து எரிந்தபோது
என்ன நிலையோ

அப்படியே நானும் எரிகிறேன்
பால் ஊட்டிய வாசம் மறவாக் கன்றை
காட்டு மிருகத்திடம்
கண்முன்னே இழந்த பரிதவிப்பில் உயிர்படபடப்பில் மூச்சிழுக்கும் தாய்ப்பசுபோல் முணுமுணுக்கிறேன்


கையுக்கருகில் கண்ட பட்டாம்பூச்சி 
கண்ணைவிட்டு காணாமல் மறைந்த
 தவிப்பில் அடம்பிடிக்கும் குழந்தையாய் மெய்மறந்து மேகமாய்
விழி நீர் சொரிகிறேன்

நிதானமற்று நிம்மதியற்று
உறங்க ஓரிடமின்றி
உண்ண வழியின்றி
ஓர் நிராகரிக்கப்பட்ட அகதிபோல்
நீள்துயில் இழந்து
உலகெங்கும் திரிகிறேன்
நீண்ட நாள்
நிலவைத்தொலைத்து
சூரியப்பாதை தாண்டி


ஒளியற்ற இருள்பாதையில்
திசைமாறி நகரும் பூமியின்
சுற்றுவட்டம்போல்
சூனியமாய் சுழல்கிறேன்
வருடக்கணக்கில் மழைவீழ்ச்சி
காணாத வரட்சிப்பிடியில்

வாடி வதங்கி
இன்றோ நாளையோ
என இந்த மண்ணில் மடியப்போகும் மரங்களைப்போல்
மீதிநொடிகளை கழிக்கிறேன்


பூக்களற்ற பாலைவனத்தில்
தேன்சேகரிக்க புறப்பட்டு
திசை தெரியாமல்
பறந்துகொண்டிருக்கும்
ஒருதேனிபோல


பூபாலம்பாடி அலைகிறேன்
குற்றமற்ற கைதியாய் இருந்தும்
தூக்குதண்டனை
விதிக்கப்பட்ட பின்பும்
விடுவிக்கப்படுவோம் என்று
விதியை நம்பி


துயரநாட்களை தூக்கமின்றி
கடக்கும் ஓர்
பாவியைப்போல வாழ்கிறேன்.
சொந்தமண்ணில் துரத்தியடிக்கப்பட்ட
 முதல்தலைமுறையின் முகவரிதேடும்
 மகனின் மனவிரக்தியோடு

அந்த மண்ணிலே ஏக்கம் சுமந்த 
ஏதிலியைப்போல் நகர்கிறேன்
உயிருக்குயிராய் நேசித்த 
ஆண்மா உதறிச்சென்றுவிட
திக்குத்திசையற்ற
வாழ்வுப்பெருவெளியில்

இறக்கவும் மனமின்றி
இருக்கவும் மனமின்றி
இயற்கையின் விதிக்காய்
இன்னும் காத்திருகிறேன்.
என்னைப்பற்றியும்
என் எதிர்காலப்பயணம்


பற்றியும் ஏதும் அறியாமல்
இன்னும் ஏதே ஒன்றை
அடையப்போவதாய்
நாளையும் உண்டென்ற
நம்பிக்கையில்
உயிரோடு ஒட்டியிருக்கும்


உடலின் மிச்ச ஆசையோடு
எதிர்பார்புக்களை நிறைவேற்ற
ஏங்கங்களோடே
தூரப்பயணம் தொடர்கிறது.
இயற்கையின் படைப்பில்


இறப்பதற்குள்
இத்தனை நாடகமா
என்வாழ்வின்
எதிர்காலப்பயணம்
எந்தவழியில்


என்னோடு யார்யார்கூட
வருவார்களோ அந்தவழியில்.

த.யாளன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.